Friday, February 16, 2018

தெற்கிலிருந்து ஒரு சூரியன் – பேரவலங்களை மறைத்த வாழ்த்து கோஷம்!


திமுக தலைவரும் தமிகத்தின் முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதியின் அறுபதாண்டு கால சட்டமன்றப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே நான்காவது பதிப்பும் வந்துவிட்டது. இந்த மலரில் கோபாலகிருஷ்ண காந்தி, யோகேந்திர யாதவ், விடுதலை ராஜேந்திரன், என்.ராம், ரவிக்குமார், ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ராஜன்குறை ஆகியோரின் கட்டுரைகளும் தேவ கௌடா, திருமாவளவன், எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. ஒருவரைப் புகழ்வது என்று முடிவுசெய்துவிட்ட பின்னர் அதில் ஒரு எல்லையையும் உண்மையையும் எதிர்பார்ப்பது என்பது வீனானதுதான். இழவு வீட்டில் அழுவதும் கல்யாணவீட்டில் வாழ்த்துவதும் சமூகத்தில் சடங்காகவும் முறையாகவும் இருக்கலாம். ஆனால், அரசியல் தளத்தில் அதே போல இழவு என்றால் அழுவதும் விழா என்றால் வாழ்த்துவதுமான சடங்காக இருக்க முடியாது. கடந்த காலத்தையும் உண்மையையும் துதிபாடிகளும் சந்தர்ப்பவாதிகளும் மறந்துவிடலாம்.. ஆனால், எல்லோரும் அப்படியே அவர்களைப் போல இருந்துவிட முடியுமா? அந்த வகையில், நானும் இதை அப்படியே விட்டுவிட முடியாது என்பதால்தான் எழுதுகிறேன். இதை எழுதுவதில் எனது துரதிருஷ்டம் என்னவென்றால், இந்த மலரில் எழுதியுள்ள பலரும் எனது மரியாதைக்குரியவர்கள் என்பதே.

‘தி இந்து’ வெளியிட்டுள்ள கருணாநிதியின் மலர் குறித்து எனது இந்த கட்டுரையை 1.ரவிக்குமார் 2.திருமாவளவன் 3.சமஸ் 4.இதர திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் என்று நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்கிறேன். முதலில் எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார்.

தன்னலத்தேட்டமே பிரதானம் - அறிவுஜீவி ரவிக்குமார்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிவி நிகழ்ச்சி இயக்குநரிடம் வேலை கேட்டு சென்றிருந்தேன். அறிமுகத்துக்குப் பிறகு, அவர் என்னிடம் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று கேட்டார். நான் எந்த தயக்கமுமின்றி உடனடியாக  புனைவில் அசோகமித்திரனும் சமூக அரசியல் தள எழுத்துகளில் ரவிக்குமாரும் பிடித்தமானவர்கள் என்றேன். எனது பதிலைத் தொடர்ந்து அவர் பேசியதிலிருந்து அவர் எனக்கு வேலை தரமாட்டார் என்று உறுதி செய்துகொண்டேன். ஆனாலும், அவருடனான உரையாடலில் படிக்கிற தலித் இளைஞர்களின் மத்தியில் ஒரு புதிய அலை உருவாகிவருவதைக் கூறினேன்.

இது நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எனது சகோதரி (கவிஞர்) பரிந்துரையின் பேரில் மீண்டும் அதே இயக்குநரிடம் வேலை கேட்டு சென்றேன். அவர் என்னை இதற்கு முன்பு சந்தித்ததை மறந்துவிட்டிருந்தார். மீண்டும் பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னர், அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் நான் கொஞ்சம்கூட தயக்கமின்றி எனக்குப் பிடித்த எழுத்தாளர் ரவிக்குமார் என்றேன். ரவிக்குமாரின் பெயரைச் சொன்னதும் அவருடைய முக மாற்றமே எனக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால், இந்த முறை எங்களுக்கிடையிலான உரையாடலில் எனது தரப்பு வாதத்தை உறுதியாகவே முன்வைத்தேன்.

ரவிக்குமார் பெயரைச் சொன்னால் வேலை கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால், வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த எழுத்தாளரை விட்டுவிட்டு வேறு யாரை சொல்ல முடியும். ரவிக்குமாரின் எழுத்துகள் எனக்குப் பிடித்துப் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழ்ச் சூழலில் பல அறிவுஜீவிகளின் மூடநம்பிக்கைகளை உடைத்தவர், கோட்பாடுகளை நிகழ்காலத்தோடு பொருத்தி ஒப்பிடுவது, கூர்மையான அவரது அரசியல், இலக்கிய விமர்சனம்,  வியக்கவைக்கும் அவரது உழைப்பு, எந்த நேரத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமான அவரது பேச்சு, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதே நேரத்தில் அவரது அதிரடியான உத்தி போன்றவற்றின் மீது எனக்கு விமர்சனப் பார்வையும் இருக்கிறது.

‘தி இந்து’ நாளிதழிலிருந்து ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலர் வெளியாவதற்கு முன்பாகவே ரவிக்குமார் கருணாநிதியைப் புகழ்ந்து மின்னம்பலத்தில் தொடர் எழுதி அதை மின்னம்பலத்திலேயே புத்தகமாக வெளியிட்டார். மின்னம்பலத்தில் வெளியான புத்தகம் வடிவமைப்பு போன்றவைகள் சரியில்லை. மேலும், அந்த புத்தகம் போதிய கவனம் பெறாததால் அதையே கிழக்கு பதிப்பகத்தில் வெளியிட்டார்.

ரவிக்குமாரைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் அவருடைய எழுத்து தற்போது ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று கூறுவேன். பத்திரிகைகள், ஊடகங்கள் பைத்தியக்கார பூதங்களாய்ப் பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் அவரும் பத்திரிகைகள், ஊடகங்களை மனதில் வைத்தே தனது சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் வகுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். ஒரு ஊடகவியலாளன் போலவே தனது சிந்தனையையும் எழுத்தையும் வடிவமைத்துகொண்டார். இந்த எழுத்து முறை என்பது ஒரு ஆண்டு வட்டம். அதாவது பட்ஜெட், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடும் புள்ளிவிவரங்கள், சில வரலாற்று நினைவு தினங்கள், சம்பவங்கள், அரசியல் நகர்வுகள், இப்படியான நாட்களைக் கொண்ட ஆண்டு வட்டம் அது. இவைகளைப் பற்றி அந்தந்த ஆண்டின் மேற்படி தகவல்கள், புள்ளி விவரங்கள், அரசியல் நடப்புகள் மீது தனது அரசியல் பார்வைகளை முன்வைத்து எழுதுவதாகும். கிட்டத்தட்ட இது ஒரு ‘மியூசிக் சேர்’ விளையாட்டு போல. இந்த வட்டத்தில் பலரும் ஓடிக்கொண்டிருப்பார்கள் இசை நின்றதும் அடித்துப்பிடித்துக்கொண்டு சேர்களில் அமர்ந்துவிடுவார்கள். இடம் கிடைக்காதவர் வெளியேற வேண்டும். அது போலத்தான் அந்தந்த நாள் நிகழ்வைப் பற்றி உடனடியாக முதலில் எழுதிவிட வேண்டும். அதிலும் ரவிக்குமார் எல்லோருக்கும் முன்னால் தான் முதலில் எழுதிவிடுபவர். அதிலும் யாரும் சொல்லாத ஒரு நுட்பமான, அறிவுப்பூர்வமான பார்வையை முன்வைக்க வேண்டும் என்று நினைத்து, திட்டமிட்டு செயல்படுத்தியும் விடுவார். அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். இது ஒரு பத்திரிகையாளனின், ஊடகவியலாளனின் தொழில் சார்ந்த சிந்தனை மனம். பல நேரங்களில் அவர் ஒரு முழுமையான பத்திரிகையாளனாக, ஊடகவியலாளனாக மாறியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ரவிக்குமார் தன்னை ஒரு பத்திரிகையாளனாக வடிவமைத்துக்கொண்டு கருணாநிதியைப் பற்றி எப்படியாவது புகழ்ந்து எழுதிவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், அவர் தன்னை ஒரு தலித் அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்றும், தமிழகத்தில் தலித்துகளுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் என்றும் நிறுவிக்கொண்டவர். அப்படியே அறியப்படுபவரும் கூட. அதனால்தான் நமக்கு பிரச்னை. அவர் இதற்கு முன்பு கருணாநிதி பற்றியும் திராவிடக் கட்சிகள் பற்றியும் என்ன எழுதினார் என்று நினைவுபடுத்திக்கொள்வது சரியாக இருக்கும்.

அவர் எழுதிய புத்தகங்களில் என்றைக்கும் இது ரவிக்குமாரின் புத்தகம் என்று தைரியமாக சொல்லக் கூடிய ஒரு புத்தகம் உண்டென்றால் அது காலச்சுவடு பதிப்பகத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘கொதிப்பு உயர்ந்து வரும்’ நூல்தான். இந்நூல் அவர் 1997 முதல் 2001 வரை தலித் முரசு, தாய்மண், தமிழ்.காம், இந்தியா டுடே, காலச்சுவடு, பிபிசி தமிழோசை ஆகியவற்றில் அந்தந்த கால கட்டத்தில் நடந்த சமூக, அரசியல் வன்முறைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் இவைக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை.

1998ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் சாதி வெறியர்கள் நடத்திய வன்முறை குறித்தும் இந்த வன்முறை வட தமிழ்நாட்டிலும் வெடிக்கும் என்ற பதற்றமான சூழலில் கருணாநிதியின் திமுக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்: கருணாநிதி அரங்கேற்றிய நாடகம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் “தலித் மக்களுக்கு எதிராக இன்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வெளிப்படையாக அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக என்றால் அது தேவர் கட்சி என்பது எவரும் மறுக்கமுடியாத ஒன்று. கருணாநிதியைவிட பெரிய தலித் விரோதியை நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாது” என்று குறிப்பிடுகிறார்.

கருணாநிதியை மிகப் பெரிய தலித் விரோதி என்று உறுதி செய்தவர் ரவிக்குமார்தான் அது உண்மையும் கூட இல்லையா.

‘கனன்றுகொண்டிருக்கும் கடலூர் மாவட்டம்’ என்ற கட்டுரையில் 1998 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் சேரியை வன்னியர்கள் தாக்கியது குறித்து “புலியூரில் தாக்குதல் நடந்தபோதும் அதன் பிறகு ஒருவார காலமும், அதிலிருந்து 10வது மைலில் நெய்வேலியில்தான் இளையபெருமாள் தங்கியிருந்தார். அங்குதான் அவருக்கு பவளவிழாவும் நடைபெற்றது. அதில் பாராட்டிப் பேசுவதற்காக சங்கரய்யா வந்தார்; நல்லக்கண்ணு வந்தார்; குமரி அனந்தனும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் வந்தார்கள். புலியூர் மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல இளைய பெருமாளும் போகவில்லை. மற்ற தலைவர்களும் போகவில்லை. இளைய பெருமாளையும் விருது கொடுத்த கருணாநிதி அரசையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், இந்த புலியூர் சேரி மக்கள் மீது வன்னியர்கள் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து தலித் அமைப்புகள் கடலூரில் பேரணி நடத்துவதற்கு அன்றைய கருணாநிதி அரசு அனுமதி மறுத்ததையும் டிசம்பர் 6 இல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 7000க்கும் மேற்பட்ட தலித்துகளை திமுக அரசு சிறையிலடைத்ததையும் பலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையும் கூறுகிறார்.

இந்தக் கட்டுரையின் கடைசியில் ரவிக்குமார் இப்படி முடிக்கிறார் “ஒரு புறம் சாதி வெறியர்களின் தாக்குதல், மறுபுறம் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை, பாதுகாக்க அரசோ, நீதிமன்றமோ இல்லை என்பது வெளிப்படையாகிவிட்டது. இனி தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வதைத் தவிர, இம்மக்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறுகிறார். இந்த வரிசையில் இப்போது ரவிக்குமார் போன்ற தலித் அறிவு ஜீவிகளின் சுயநலத்தையும் சேர்க்க வேண்டியுள்ளது.

கருணாநிதி அரசு பற்றி ரவிக்குமார் இந்த நூலில் மேலும் ஒரு புகழ் மொழியை எழுதியிருக்கிறார். ‘இந்துத்துவாவின் விளைச்சல் நிலமாய்ப் பல்கலைக் கழகங்கள் என்ற கட்டுரையில், “தமிழக அரசு இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடாது. கருணாநிதி அரசு இருக்கும் வரை அது நடக்கப் போவதில்லை. நாமே அந்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவது ஒன்றே நமக்கிருக்கும் வழி. அதைப் பல்கலைக் கழகங்களிலிருந்து தொடங்குவோமா” என்று கருணாநிதி அரசின் மீதான நம்பிக்கையின்மையை உரைக்கிறார்.

இந்த கால கட்டத்தில்தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக அரசு பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான காலிப் பணியிடங்களை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ரவிக்குமார் தீவிரமாக இயங்கிய கால காட்டத்தில் திராவிட அரசியல் மீது அவர் மறுக்க முடியாத அளவுக்கு அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நூலில் ‘திராவிட அரசியலின் மறைவு’ என்ற கட்டுரையில், “பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் – திராவிட இயக்கக் கொள்கை வழியிலிருந்து திமுக விலகிவிட்டது என்று இப்போது பல விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக, திமுகவைப் புரட்சிகர கட்சியாக உளப்பூர்வமாகவும், உதட்டளவிலும் எண்ணிப் பேசி வந்த பத்திரிகையாளர்கள் சிலர், இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்” என்று திராவிட இயக்க ஆதரவாளர்களைக் கிண்டல் செய்துள்ளார்.

திமுக – பாஜக கூட்டணி அரசு ஏற்பட்ட பிறகு தங்களது அரசைக் கலைத்துவிடுவார்களோ என்று அச்சப்பட்ட திமுக அரசு பாஜக ஆளும் மாநிலங்கள்கூட செய்யாத அளவுக்கு இந்துத்துவா திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியதையும், முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். கூட செய்யாத பாதகங்களை திமுக செய்திருப்பதாக கூறுகிறார்.

கட்டுரையின் முடிவாக தனது எழுத்துகளை கவித்துவமாக திட்டமிடும் ரவிக்குமார் திராவிட அரசியலைக் கிண்டல் செய்து எழுதியதை அப்படியே தருகிறேன். “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’ என்ற கதையில், ஆலிஸ் ஒரு ஒரு பூனையைச் சந்திப்பாள். அந்தப் பூனை மாயமாய் மறையும் தன்மை கொண்டது. அவளிடம் பேசிவிட்டு அது மறையத் தொடங்கும். வாலின் நுனியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அது மறைய ஆரம்பிக்கும். பூனை முழுவதும் மறைந்த பின்பும் கொஞ்ச நேரம் அது இளிப்பது மட்டும் பார்வைக்கு எஞ்சியிருக்கும்.

நான் இளிப்பு இல்லாத பூனையைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பூனை இல்லாமல் வெறும் இளிப்பை மட்டும் இப்போதுதான் பார்க்கிறேன் என்பாள் ஆலிஸ். நாம் இன்று பார்க்கும் திமுக பாணி திராவிட அரசியலும் அப்படித்தான். டெலிவிஷனை நிறுத்திய பிறகும் அதன் திரையில் சில நொடிகள் காட்சி எஞ்சியிருப்பது போல் தென்படும் மாயத்தோற்றம் மாதிரிதான் இது.

திராவிட அரசியல் எப்போதோ மறைந்துவிட்டது. இப்போது மறைந்தது பூனையல்ல… அதுவிட்டுச் சென்ற இளிப்பு மட்டும்தான்” இதைவிட கூர்மையாக திராவிட இயக்க அரசியலை யாரும் கிண்டல் செய்துவிட முடியாது என்று உறுதியாகக் கூறலாம்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலூர் பக்கிரியின் மரணம் குறித்து எழுதும் ரவிக்குமார் “இன்று பாலூர் பக்கிரியின் மரணத்துக்கு கருணாநிதி அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். அவருக்கும் அவரது கூட்டணிக்கும் சரியான பாடத்தைப் புகட்ட தலித் இயக்கங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பக்கிரியின் மரணம் ஒரு குறியீடு. தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது ஏவப்படும் திமுக அரசின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் குறியீடாக அதை மாற்ற வேண்டியது மானமுள்ள தலித் மக்களின் உடனடி கடமையாகும்” எனச் சுட்டிக்காட்டிவிட்டு தனது மானத்தை அடகு வைத்துவிட்டார் என்பதுதான் பெருஞ்சோகம்.

1999 ஆம் ஆண்டு மாஞ்சோலைத் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியில் கருணாநிதி அரசின் போலீஸார் நடத்திய தடியடியில் 17 பேர் கொல்லப்பட்டனர். தாமிரபரணியில் தலித்துகளின் ரத்தம் ஓடியது. தமாக ஜி.கருப்பய்யா மூப்பனார் இந்த பிரச்னையில் தலித்துகளின் பக்கமே நின்றார். இதற்கு கருணாநிதி வெளியிட்ட “சாதி வெறியர்களோடு மூப்பனார் சேரலாமா?” என்ற அறிக்கையை சுட்டிக்காட்டும் ரவிக்குமார் இது கருணாநிதியின் நரிவேலை” என்று கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட இந்த படுகொலையை ஜெயலலிதா கண்டிக்கவில்லை. ஓட்டுக்காகக்கூட ஜெயலலிதா தலித் மக்களுக்காக பரிந்து பேசமாட்டார் எனக் கூறுகிறார்.
தொடர்ந்து அந்த கட்டுரையில், “அப்பட்டமாக, தலித் மக்களுக்கு எதிரானவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ள கருணாநிதிக்கும் அதற்குச் சற்றும் குறையாத ஜெயலலிதாவுக்கும் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டியது தலித் மக்களின் கடமையாகும். திராவிடக் கட்சிகளின் சாதி வெறி ஆட்சிகளுக்கு முடிவு கட்ட, தலித் மக்கள் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் பயன்படுத்திக்கொள்வதிலும் தலித் அமைப்புகள் இனியும் பிழை செய்யலாகாது” என்று திராவிடக் கட்சிகளுக்கு எதிராக தலித் அமைப்புகள் திரள வேண்டும் என ரவிக்குமார் கோரிக்கை விடுக்கிறார்.

 அதுமட்டுமில்லாமல், திருநெல்வேலியில் இப்படியொரு அநீதி நடக்க காரணமாயிருந்த கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்கின்றனர். “கலெக்டர் மீது நடவடிக்கை எடுத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் போராட்டம் நடத்துவார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். அந்த கலெக்டர் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். இதன்மூலம்  கருணாநிதி  சாதிவெறியைத் தூண்டிவிடுகிறார் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே வட மாவட்டங்களில் வன்னியர் தலித் – மோதலை உருவாக்க பல முயற்சிகளை செய்து வருகிறது என்று கருணாநிதியின் சாதிய அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்களை உறக்கச் சொல்கிறார்.

கருணாநிதியின் சாதிவெறிக்கும் ஊழலுக்குமான மாற்று ஜெயலலிதாவின் சாதிவெறியும் ஊழலும் அல்ல என்று ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ரவிக்குமார் சமமாக வைத்துப் பார்த்துள்ளார்.

இந்த விமர்சனங்களையெல்லாம் விஞ்சும் அளவுக்கு சிகரம் வைத்தாற்போல், ரவிக்குமார் கருணாநிதியின் கறுப்பு அறிக்கை என்ற கட்டுரையில், “உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என ராஜாஜியைப் பற்றி அண்ணாதுரை சொன்னதாகக் கேள்விப்பட்டிருப்போம். இது ராஜாஜிக்குப் பொருந்துமோ இல்லையோ கருணாநிதிக்கு அப்படியே பொருந்தும். அதுவும் தலித்துகளுக்குக் கருணாநிதி அரசு செய்துவரும் அநீதிகளைப் பார்த்தால் இதில் எவருக்கும் ஐயம் எழாது” என்று கருணாநிதியின் வஞ்சனை மனத்தைக் கண்டு கொதித்துள்ளார்.

மேலும், கருணாநிதி வெளியிட்ட வெள்ளை அறிக்கை, வெள்ளை அறிக்கையல்ல வெள்ளையடித்து மறைத்துவிடுவது என்ற புது அர்த்தத்தை கருணாநிதி உருவாக்கியிருக்கிறார் என்று சாடுகிறார். தமிழக சட்டப் பேரவையில் கருணாநிதி வெள்ளை அறிக்கையென ஒரு புளுகு மூட்டை வெள்ளை அறிக்கையை முன்வைத்தார்.
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் அப்பட்டமான அநீதி தலித்துகளுக்கு இழைக்கப்பட்டுள்ளது. தலித்துகளுக்கு எதிராக போலீஸை ஏவுவதில் இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ள கருணாநிதி தலித்துக்களின் இட ஒதுக்கீட்டில் அநீதி இழைப்பதிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்பது தலித் விரோத ஆட்சிதான் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார் என்று தனது எழுத்துச் சவுக்கால் கருணாநிதியை விளாசுகிறார்.

இப்படியாக கருணாநிதி, ஜெயலலிதா மீதும் திராவிடக் கட்சிகளின் மீதும் தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வந்த ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். பிறகு 2006 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டு மன்னார்கோயில் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது அதிமுக கூட்டணியிலிருந்த விடுதலை சிறுத்தைகள், தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து திமுக ஆதரவு நிலையை எடுத்தது. அதன் பிறகுதான் ரவிக்குமார் கருணாநிதியிடம் தஞ்சமடைந்தார். கருணாநிதிக்கு அனுக்கமானார். அதன் பிறகு ரவிக்குமார் கருணாநிதி பற்றி எழுதியது எல்லாம் கருணாநிதி வாழ்த்துப்பாடல்தான்.

ரவிக்குமாரின் இந்த பரிணாமத்தின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. ரவிக்குமாருக்கு தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தின் மீது பெருவிருப்பு இருந்தது. அறிவின் மூலமாக அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் தமிழக அரசியலில் சமகால உதாரணம் ரவிக்குமார். அறிவுஜீவிகள் அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவதால் அவர்களுக்கு அதிகாரத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதே போல, அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புவதன் மூலமும் அறிவுஜீவிகளுக்கு அதிகாரத்தை நெறுங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டாவது வழியை ரவிக்குமார் தேர்வு செய்துள்ளார். அதிகாரத்தை நெறுங்கிய ரவிக்குமார் அதை தன்னலத்துக்காக பயன்படுத்திக்கொண்டார். அறிவும் சுயநலமும் முரண்படும்போது அறிவு தோற்கிறது என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். அதற்கு ரவிக்குமார்தான் சிறந்த உதாரணம். ரவிக்குமார் போட்டுக் கொடுத்த பாதையில் இன்று பலரும் அதிகாரத்தை அடைவதற்கான குறுக்குவழியாக அறிவைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், மக்கள் பணி, களத்தில் இறங்கி வேளை செய்வதெல்லாம் தேவையில்லாத செயல்களாகிவிட்டன.

கருணாநிதி, ஜெயலலிதா, திராவிடக் கட்சிகளின் மீதான ரவிக்குமாரின் விமர்சனங்களைப் பற்றி இப்போது யோசிக்கும்போது, ரவிக்குமார் அவற்றையெல்லாம் உண்மையாக எழுதினார் என்று நம்பமுடியவில்லை. உண்மையில் ரவிக்குமாரின் தன்னலத் தேட்டமும் அதிகாரத்தின் மீது அவருக்கு உள்ளூர இருந்த வேட்கையும், கருணாநிதி மீதிருந்த அன்பின் மிகுதியுமே காரணம் என்று புரிபடுகிறது. தன்னலத்துடன் தன்னை முன்னிறுத்தி மட்டுமே கட்சியின் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் நகர்த்தும் ரவிக்குமார் ஒரு எழுத்தாளனாகத் தோற்றுவிட்டார். அரசியல்வாதியாகவும் தோற்றுவிட்டார் என்பதை அவரே அறிவார். பின் நவீனத்துவத்தில் ஆசிரியனின் மரணம் குறித்து பேசப்படுகிறது. அதை அனுபவப்பூர்வமாக ரவிக்குமார் விஷயத்தில் உணர்ந்துள்ளேன். “கொதிப்பு உயர்ந்து வரும்” நூல் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

(அடுத்தது விசிக தலைவர் திருமாவளன் பற்றி விரைவில்..)

No comments:

Post a Comment