Sunday, April 20, 2014

குருஞ்சாக்குளம் -2 வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதி வைத்துக்கொள்கிறது...



குருஞ்சாக்குளம் படுகொலை பற்றி எழுதிக்கொண்டிருந்த போது நண்பர் ஜெயபால் ஒரு பாடலை கேட்கச்சொல்லி கொடுத்தார். அதில் அ.மார்க்ஸ் முன்னுரை கொடுக்க ரவிக்குமார் பாடல் வரிகளில் கே.ஏ.குணசேகரன் பாடி வெளியான மனுசங்கடா இசைத்தொகுப்பில் குருஞ்சாக்குளம் படுகொலை பற்றி ஒரு பாடல் வரலாற்று சாட்சியமாய் பதிவாகியிருந்தது. அந்தப் பாடல் குருஞ்சாக்குளத்தைப் பற்றிய நினைவுகளை கிளறிவிட்டு தூக்கம் தொலைத்தது.





இந்த குருஞ்சாக்குளம் படுகொலைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது பேசியிருக்கிறார்களா? என்றால், ஆமாம், பேசியிருக்கிறார்கள். 2006 –ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது முத்துவேல் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். “கலிங்கப்பட்டியில் இரண்டு தலித்துகளின் படுகொலைக்கு காரணமானவர் வைகோ.” என்பதுதான் அந்த அறிக்கை. எல்லாவற்றையும் நினைவாற்றலோடும் புள்ளிவிவரங்களோடும் அறிக்கை வெளியிடும் கருணாநிதி இந்த அறிக்கையை இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும் சம்பவம் நடந்த ஊர்பெயரையும் மாற்றி சொன்னார். படுகொலை நடந்தது 1992 –ல் ஆனால், இதை கருணாநிதி 2006 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட வேண்டிய காரணம் என்ன?
தலித் பேந்தராக இருந்து விடுதலை சிறுத்தைகள் என அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்து, 2000 -ம் ஆண்டுக்கு முன்பு வரை தேர்தல் பாதை திருடர்கள் பாதை, என்று தேர்தல் அரசியலை புறக்கணித்தார்கள். பின்னர் தலித்துகளுக்கு பாராளுமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால், இரட்டை வாக்குரிமைதான் தீர்வு என்று பேசியவர்கள், தேர்தல் அரசியலை புறக்கணிப்பதனால் ஏற்படும் ஒரு இயக்கம் எதிர்கொள்ளும் சாதக பாதகங்களைக் கருத்தில்கொண்டு 2001 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினார்கள். பிறகு மீண்டும் 2006 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார்கள். 2006 ம் ஆண்டு தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அதிமுக, மதிமுக கூட்டணியில் போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தல் அரசியலை சாதி வெறி, மதவெறி அடிப்படைவாதிகளோடும் சேர்ந்துதான் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் சமத்துவ சாபம்.
கருணாநிதியின் அறிக்கையைக் கேட்ட ஜெயலலிதா கருணாநிதிக்கு பதிலடி கொடுக்க அன்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை அழைத்து அந்த படுகொலைக்கு வைகோ காரணமல்ல என்று பேட்டி தரச்சொன்னார். திருமாவளவனும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அவரது வீட்டுக்குச் சென்று வைகோவுடன் இருந்து பேட்டி கொடுத்தார். வைகோவும் இதுதான் சமயமென்று குருஞ்சாக்குளம் படுகொலையின் ரத்தக்கறையை திருமாவளவனை வைத்து துடைத்துக்கொண்டார். அப்போது அந்தப் பகுதியின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் சென்றார்கள். திருமாவளவனைச் சந்தித்து மரியாதை செய்துவிட்டு இந்த கொலைகளைச் செய்தவர்களைக் காப்பாற்ற வைகோவும் வைகோ தம்பியும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று உண்மையைக் கூறினார்கள். உண்மையில் அன்று திருமாவளவனுக்கு தர்மசங்கடமாகித்தான் போனது. தேர்தலில் வெற்றிபெற தலித்துகளின் ஓட்டு மட்டும் போதாது சாதி இந்துக்களின் ஓட்டும் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த நாட்டில் அவர்களுடன் சேர்ந்து காலம் தள்ள வேண்டியிருக்கிறது. தேர்தல் அரசியலின் சிக்கலை திருமாவளவன் அன்றே புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
குருஞ்சாக்குளத்திலிருந்து இந்த வழக்கை நடத்திய தலித் இளைஞர்கள் வழக்கு நீதிமன்றத்தில் தோற்றுப்போனபோது இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து விரக்தியடைந்து இந்த அரசியலைவிட்டு வெளியேறினார்கள்.
குருஞ்சாக்குளம் கடந்த 22 ஆண்டுகளில் நிறைய மாறித்தான் இருக்கிறது. அங்கே அந்த படுகொலை சம்பவத்தை யாரும் இன்னும் மறந்துவிடவில்லை. காந்தாரியம்மன் கோயில் இன்னும் குட்டிச்சுவராகத்தான் நிற்கிறது. ஆனால், சர்க்கரையின் மகன் வளர்ந்துவிட்டிருக்கிறான். இன்னொரு தலைமுறை வளர்ந்து வந்துவிட்டார்கள். ஆதிக்க சாதிகளுக்கு எதிராகப் பேச.
தேர்தல் அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் பெறுவதில் தலித்துகளின் குரல்வளையை நெறித்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் ஜனநாயக கொலைச்செயலை தலித்துகள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். முதல் பத்து ஆண்டுகளில் இரட்டை உறுப்பினர் இருந்தபோது உறுப்பினராக இருந்த எல்.இளையபெருமாள் போன்றவர்களின் காலத்தில் தலித்துகளின் குரல் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக ஓங்கி ஒலித்தது. அதற்கு பின்னர் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டது. தலித் வேட்பாளர்கள் வெற்றிபெற சாதி இந்துக்களின் ஓட்டும் தேவை என்பதால் அவர்களுன் ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தலித் அரசியல் தலைவர்கள் தேர்தல் அரசியலில் திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் சேர்ந்து சோரம் போகிறார்கள் என்று அதே சோரம் போகிற வேலையைச் செய்துகொண்டு குற்றம் சாட்டும் சாதி இந்துக்கள், தலித்துகள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதியின் குரல் ஒலிக்க அவர்கள் வைத்த இரட்டை வாக்குரிமை கோரிக்கையைப் பற்றி மறந்தும்கூட வாய்திறப்பதில்லை.
சாதி ஒழிப்பு என்பது சாதியை எதிர்த்தோ மறுத்தோ மட்டும் பேசுவது ஆகிவிடாது. சாதி ஒழிப்பு என்பது தலித்தாக மாறி தலித்துகளாக தலித் மக்களுக்காக பேசுவதுதான் உணமையான சாதி ஒழிப்பு வழியாக இருக்க முடியும்.

Saturday, April 12, 2014

நிலா



      ஒவ்வொரு அடி நடையும் எட்டி வைக்கும்போது அது எட்டி வைத்தது. விசையைக் குறைத்து நடக்கும் போதேல்லாம் அதுவும் விசையைக் குறைத்தது என்னை மிஞ்சாமலும் பின் தங்காமலும் எனக்கு போட்டியாய் தலைக்கு மேலே நிலா என்னோடு நடந்துகொண்டிருந்தது,  அதன் ஒளிப்பிரவாகத்தில் என்னை பரவசப்படுத்திக்கொண்டிருந்தது. அதன் ஒளிக்கீற்றுகள் எனது தலையை ஊடுருவி மூளைக்குள் வெள்ளம்போல பாய்ந்து எனக்குள் நிரம்பிக்கொண்டுருந்தன. அளவற்ற பேரொளி அதன் குளுமை மனம் உடற்பரப்பெங்கும் அலைகளாய் பரவின.  கண்களை மட்டுமல்ல அது உடலை மனதை ஆன்மாவை கூசச்செய்யும் வெளிச்சம் அதன் பெருவெளிச்சத்தில் எனது நிகழ்நினைவு மறைந்து மறந்து வேறு என்னென்ன காட்சிகளெல்லாமோ மனஒளித்திரையில் சிதைவுகளாய் வருகின்றன. அவைகள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்னால் தாங்கமுடியாததாய் இருக்கும் கனத்தில்தான் உணரமுடிகிறது இன்று பௌர்ணமி என்று.
     இந்த காற்றும் வானமும் எப்போதும் இங்குதான் இருந்துகொண்டிருக்கின்றன அவை எனது பார்வையாளர்களாக இருந்து எப்படியோ அவை நானாகவே ஆகிவிட்டன. எல்லாவற்றின் மையமாக இருந்தாலும் என்னால் நெருக்கம் பாராட்டவே முடியவில்லை வெஞ்சூரியனோடு. ஏனோ தெரியவில்லை இந்த நிலா மட்டும் என்னொடு ஒட்டிக்கொண்டுவிட்டது. அது மனத்தாலும் உடலாலும் என்னை நெருங்குகிறது நானே மறந்தவைகளை மறக்க நினைப்பவைகளை நிலவு நினைவூட்டுகின்றது. நிலவோடு நானும் என்னொடு நிலவும் எத்தனை தூரங்களைக் கடந்து இருப்போம் அது பூமியின் குறுக்காகக் கூட இருக்கலாம். புதிராகவும் புனைவாகவும் முகிழ்க்கும் நிலா என்னை பித்தம் கொள்ளச் செய்கிறது. இந்த நிலவு வளர்ந்தும் தேய்ந்தும் தன்னை ஒவ்வொருநாளும்  ஒப்பனை செய்துகொள்கிறது. ஆனால் நான் வளர்ந்துவிட்டேன் ஒருபோதும் என்னால் குழந்தையாகவே முடியவில்லை. எனது குழந்தைமையை திரும்ப அடையவே முடியவில்லை அத்தருணங்களில் நிலவு ஞாபகப்படுத்தும் நினைவுகள் துயர இசைகளின் பின்னணியோடு வரும் பிம்பங்கள் ரணம் கீறியும் களிப்பூட்டியும் போவதை தவிர்க்கவே முடியவில்லை. நான் விட்டாலும் இந்த நிலா விடாது போலிருக்கிறது அதைப்போலவே என்னை காலமெல்லாம் உருக்கொண்டும் உருக்குலைந்தும் போ என்று சபித்துச் சிரிக்கிறது.
       நிலவின் சர்வவெளிச்சம் இன்று பௌர்ணமி என்பதை உணர்ந்த கனத்தில் வெளிச்சத்தில் காட்சிகள் சலனமாகும் திரைச்சீலையாய் நினைவுகளை மனவெளியெங்கும் இழுத்துச் செல்கிறது . என்ன ஒரு அபத்தம் இதில் சில என்னுடையவை இல்லை என்றாலும் இந்த வெண்ணிலா இல்லை இல்லை இதுவும் உன்னுடையதுதான் என்று காட்டிச் சிரிக்கிறது பல நேரங்களில் இந்தக் காட்சிகளில் எது என்னுடையது எது என்னுடையது இல்லை என்று என்னால் கண்டறியவே முடியவில்லை. நிலவு சொல்லும் எல்லாவற்றையும் என்னுடையவையே என்று நம்பத்தொடங்கி எல்லாமும் என்னுடையவையாகவே ஆகிவிட்டன. அதில் சூரியன் மலைகளுக்கு பின்னால் இருக்கும் தன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாலையில் எல்லாமும் இடிந்து கலைந்துபோன மனத்தோடும் முகத்தோடும் வாத்தியாரின் மீது கொலைவன்மத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தேன். அன்று கடைசி பாடவேளையில் கொழுக்கட்டை வாத்தியார் எனது கனவுகளை உடைத்து நொறுக்கியிருந்தார். இல்லை இவர் சொல்வது பொய்யாகக்கூட இருக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன். நிலா எவ்வளவு அழகாக இருந்தது விழுதுகள் நிறைந்த பெரிய ஆலமரத்தின் அடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்த போது, எனது அழைப்புக்கு நிலா ஓடிஓடி வருவதும், மலைமேல் ஏறி வருவதும், மல்லிகைப் பூக்களை  பறித்துக்கொண்டு எனது வீட்டுக்கு வருவதும் எத்தனை வசீகரமாக தொடர்ந்தது அந்த கனவு, உம்மனாமூஞ்சியோடு “அப்பா நிலாவுல வெறும் மலைகளும் பாறையும்தான் இருக்குதாமே கொழுக்கட்டை வாத்தியாரு சொன்னாரு” என்று கேட்டதற்கு
“அப்படியா வாத்தியார் சொன்னார்னா அப்ப சரியாதான்டா இருக்கும்” என்று சொன்ன போது கண்ணில் நீர் தளும்பிவிட்டது. எங்கிட்ட பொய்பொய்யா சொல்லியிருக்கடி கிழவி என்று கதைகதையாய் சொன்ன பாட்டியைத் திட்டியபோது  
“ம்க்கூம் வாத்தியான் என்னா மானம் ஏறிப்போய் பார்த்தானமா? அங்க வெறும் மலைதாங்கீதுனு” என்று அவள் சொன்னபோது கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது. ஆனாலும் பின்னாட்களில் பாட்டியும் வாத்தியார் சொன்னதைத்தான் நம்பியிருக்கிறாள் என்பதை அறிந்தபோது நிலாவின் முதல் முகப்பூச்சு உதிர்ந்தது. எனது குழந்தைமையும்தான்.
       அதிக வெளிச்சமும் அதிக இருட்டும் சலிப்பூட்டுகின்றன அவை விரைவில் சோர்வடையச் செய்கின்றன. இருட்டும் வெளிச்சமும் புணரும் நிலா நாட்களில் நடப்பது என்பது நிலவுக்கும் எனக்கும் பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் இப்போதெல்லாம் வாதையாகத்தான் இருக்கிறது. திடீரென எங்கிருந்தோ வந்த மேகக்கூட்டங்களில் நிலா தொலைந்து போயிருந்தது. இதுதான் சமயமென நழுவ எண்ணி வேகத்தைக் கூட்டிய போது எட்டி என் விரல் பிடித்துக்கொண்டது. இனி தப்பிக்கவே முடியாது என்றானபின் இருவருமாய் பாரிமுனையை அடைந்தோம் பேருந்துகள் எல்லாம் பணிமனைக்கு காலியாகப் போய்க்கொண்டிருந்தன.
   நடைபாதைகளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் நிறையபேர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள் அதுதான் அவர்களது இருப்பிடமாக இருக்க வேண்டும். அதில் ஒருத்தி பெருத்த வயிரோடு முலைகள் சரிந்து ஆட்டோ சத்தத்தைப்போல குறட்டைவிட்டு உறங்கிகொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் படுத்திருக்கும் பெண் ஒரு நதியைப்போல் ஒருக்கலித்து படுத்திருந்தாள் அவளது கால்களில் முத்துக்கள் நிறைந்த கொலுசு போர்வைக்குள் கால்களை இழுக்கும் போது சினுங்கியது. அவள் அநேகமாக பருத்த பெண்ணின் மகளாக இருக்க வேண்டும். அவர்களைக் கடந்தபோதுதான் அந்த பருத்த பெண்ணுக்கு யானைக்கால் என்று உணரமுடிந்தது.
  ஒரு மனநோயாளி எழுந்து உக்கார்ந்துகொண்டு யாருடனோ தனியாக பேசிக்கொண்டிருந்தான் இல்லை யாரையோ கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். அவனது தலைமுடியும் தாடியும் சடைபோட்டிருந்தது.  
   நிலாவின் சந்தன ஒளியும் சாலையோர கம்பங்களிலிருந்த சோடியம்விளக்கின் பொன்மஞ்சள் ஒளியும் சேர்ந்து வேரொறு வண்ண வெளிச்சக் குழைவாகி ஒளிர்ந்தன. பகலில் கொடூரமாக தோற்றமளிக்கும் சாலைகள் இரவில் சப்தமற்று அழகாய் நீண்டுகிடந்தன. ஒரு நாய்க்குட்டியைப் போல எகிறிகுதித்து ஓடி பழக்கழிவுகளை கொரிக்கும் பெருச்சாலியின் கண்களில் நீலம் மினுக்கியது.
            ஒரு பறவையின் சத்தமோ அல்லது ஒரு மூஞ்சுரின் கிறீச்சிடலோ போன்ற சத்தம் கேட்டு திரும்பிய போது பெர்ஃப்யூம் கலந்த மல்லிகைப் பூவின் வாசம் நாசியில் சுகந்தது. மிக அழகாய் நேர்த்தியாய் ஒருகண்ணை மெல்லச்சுருக்கி சைகை செய்து அழைத்தாள் என்னை. அடர்த்தியான ரோஸ்நிற சேலை அவள் உடல் செழிப்பை பலமடங்கு பெருக்கிக்காட்டியது. அவள் முன்னெடுத்து விட்டிருந்த தளர்வாய் பின்னிய சடை சாட்டையாய் சொடுக்கி அசைந்தது.
        அவளை நெருங்கியதும் ஓரிரு வார்த்தைகளிலேயே என்னை விசாரித்து முடித்துவிட்டாள். எனக்கும் அவளுக்கும் மட்டும் கேட்கும்படி பாதி மனதுக்குள்ளும் பாதி உதடுகளிலுமாக நூர்ரூபா நூர்ரூபா என்று வெறும் விரல்களில் ரூபாய் நோட்டை உரசினாள். எனது சட்டையை துழாவிப் பார்த்ததில் ஐம்பது ரூபாய்தான் இருந்தது. இல்லை என தலையசைத்து நடக்கையில் என்ன எவ்வளவுதான் வெச்சிங்கீற, அம்பது ரூபாவா ஏன் அதைவிட சொம்மாதான் வந்துட்டு போயேன். என்று சிடுசிடுத்துவிட்டு வேறு யாரேனும் வருகிறார்களா என பார்த்துப் போனாள்.
      அவமானப்பட்ட உணர்வில் புழுங்கி நடக்கையில் நிலா எக்காளமிட்டு சிரித்ததை நேர்க்கொண்டு பார்க்க முடியாததாக இருந்தது. இதை யாரிடமும் சொல்லிவிடாது என்றாலும் அது எப்போதும் என்னிடமே சொல்லி சிரிக்கும் காட்சியை நினைத்தாள் சிராய்ப்பு காயங்களில் படும் குளிர்  நீராய் நிலாவின் வெளிச்சம் எரிச்சலாய் இருக்கிறது. இனி அதன் முகத்தை ஏறிட்டே பார்க்கக்கூடாதென தலைகவிழ்ந்து போகையில் ஆறுதல் பேசி என்விரல் பிடித்ததில் எனது உடல்முழுக்க பரவியிருந்த வெப்பத்தில்  சூடுபட்ட பூனையாய் இருட்டு மேகத்தில் ஒளிந்துகொண்டது. கோபத்தில் ஒன்று டபில்யூ எண் பேருந்தில் ஏறிக்கொண்டேன். ராயபுரத்தில் இறங்கும்போதுதான் கவனித்தேன் நிலா பேருந்து கூரையிலிருந்து விடுபடுவதை.
        நள்ளிரவில் விளக்கனைக்கப்பட்ட கட்டடங்களுக்கு நிலா ஒளியூட்டிக்கொண்டிருந்தது. மனிதர்கள் நடமாட்டமற்ற நகரம் அதன் உயர்ந்த கட்டடங்கள் மனிதர்கள் உறங்கும் மிகப்பெரிய கல்லறைகளாய் கனத்து நின்றன. நிலா எனது நினைவுச் சுருள்களிலிருந்து எதையோ அவிழ்த்துக்கொண்டிருந்தது. திடீரென மனப்படச்சுருள்கள் நீண்டு சுருண்டதில் சட்டையில்லாமல் கண்ணனின் கல்லறையில் அமர்ந்திருக்கும் ஐசக், பாறைமீது போதையில் மல்லாந்து கிடக்கும் வெட்டியான் ரொட்டி தாத்தா, யாருமில்லாமல் திக்கற்றவனாய் இறந்துபோன சின்ராஜியின் எரியும் உடலை தடியால் அடித்து களைத்து எரித்துக்கொண்டிருக்கிறேன் நான். பிணங்கள் உறங்கும் சிறிய வீடுகளாய் இருந்தன கல்லறைகள். சவம் திண்ணும் தீயும் தீயில் பிணத்தின் கொழுப்பு உருகும் வாடையும் நிலா வெளிச்சத்தொடு கலந்திருந்தது. சாவுக்குருவி ஒரு சோகப் பாடலை அலறிப் பறந்துகொண்டிருந்தது. காற்றில் பிணவாடை முகர்ந்து குமட்டிய போது  விசையா நட என்பதைப்போலிருந்தது என்னுடனான அதன் நகர்வு.
          மிக சன்னமாய் ஒலித்தது வண்டின் ரீங்காரமாய் ஆர்மோனியமும் டோலக்கின் ஓசையும் குதிரைகளின் குளம்படியாய் தபலாவின் தாளமும். உழைத்துக் காய்ப்பேறிய குரலில் அலங்காரமற்ற வார்த்தைகள் நிறைந்த பாடல் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது. குரலிலிருந்த போதை என்னைத் தொற்றிக்கொள்ள நிலவோடு மிதந்தேன்.
         ட்யூப் லைட்டின் வெளிச்சத்தில்  சாமியான பந்தலின் கீழ் கூட்டமாய் இருந்தார்கள் சிலர் அழுது முடித்துச் சலனமற்று சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். சிலர் தள்ளாடும் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். மரணத்தை அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்ததைப் போலிருந்தது. வாழ்வின் நிலையாமையைப் பற்றிய கானா பாடலை எள்ளலான குரலில் எடுத்தார் ஒரு வயதான பெரியவர். அவர்கள் வாழ்க்கையைப் பாடுவதைப் போல மரணத்தையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களின் வாழ்வின் அகராதியிலிருந்து சில சொற்களைக்கொண்டு ஒரு பாடலைப் பாடினார்கள் அது அடுக்கு மாடிகளில் ஜன்னல் கதவுகளை அடைத்து உறங்குபவர்களுக்கு ஏதோ புதிய மொழிப் பாடலாகக் கேட்கலாம்.
        அதிர்ந்து ஒலிக்கும் டோலக்கில் ஆதி இசையின் உயிர் துடித்தது. பழுப்பு நிற டோலக்கின் ஒருபக்கத்தில் ஓங்கி அடிக்கப்பட்டதும் நிலா டோலக்காய் அதிர்ந்து அலைஅலையாய் பரவியது. டோலக்குக்காரன் பாடலுக்கு ஏற்ப மூர்கமாக அடிக்கிறான் பாடல் உச்சகதியைத் தொடுகிறது ஆண்களும் சில பெண்களும் எழுந்து ஆடுகிறார்கள் தூசு பறக்கிறது அவர்கள் பாடலால் மரணத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள். இசையின் உச்சத்தில் டோலக்குக்காரன் நிலாவை அடித்த அடியில் நிலா வெடித்துச் சிதறியது.
“அடி காணும் இளங்குயிலே  கானகத்து பெண்மயிலே

காடப்புறா ராவனமே கணக்கெழுதும் புத்தகமே

கலைமானின் வண்டினமே கஸ்தூரி அற்புதமே

கதம்பகொடி வாசகமே கதம்பகொடி வாசகமே…”

புஜக்கட்டையும் தலையில் கிரீடமும் தெருக்கூத்து அரிதாரத்தில் காமன் வேஷம் போட்ட ரேணு பெரியப்பா ரதியின் மீதான காதலை உருகிஉருகி பாடுகிறார் இடையில் இறந்தவரைப் பற்றியும் பாடி எல்லோருடைய சோகத்தையும் பாடியேத் தீர்த்துக்கொண்டிருக்கிறார். அவரின் கம்பீரமான குரலிலும் துயரப்பாடல்களின் நடனத்திலும் இழவு வீட்டு சனமெல்லாம் அங்கங்கே அமர்ந்து பார்த்துக் கரைந்துகொண்டிருக்கிறார்கள். பாடலின் துயரம் தாளாமல் நிலா கண்ணீரையெல்லாம் பனியாகக் கொட்டுகிறது. ஒவ்வொரு அடியையும் பாடிமுடித்ததும் ‘ஆங்’ கொட்டி ஆமோதிக்கும் மேளக்காரர் எலந்திக்கண்ணு மாமா பாடலைக் கூட்டி முடிக்கும்போது அந்த சோகத்தை ஆங்காரித்து ‘ஆ’வென்று கத்தி சிறிது நேரம் மேளத்தை உக்கிரமாக அடித்து நிறுத்துகிறார். அது துயரத்தை கொண்டாடும் இசையாக இருந்தது.                நாதா!... சாமி!...  ரதியின் அவலக் குரலை உரத்துக் கதறுகிறார் பெண்வேஷமிட்ட சின்னதுரை பெரியப்பா.

“தாதிகளா தோழிகளா தங்கியிருந்த மாதர்களா

என் தாளிக்கயிறருந்து தரையில்விழ கண்டேனடி

மாலை கழன்றுவிழ என் மன்மதனார் போகக்கண்டேன்

நான் கண்ட கனவுபடி என்கணவரும் மாண்டாரடி

என்னருமை தோழிகளா எளவாழத்தண்டுகளா

காமன் இறந்தாரடி கண்டீர்களா பெண்டுகளா…” 

என்று காமன் இறந்த துயரத்தை ரதி பாடும் போது கட்டிலில் கிடத்தியிருக்கும் காளி தாத்தாவின் உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் பெண்கள் அவரவர் கவலையை நினைத்து அடக்கமுடியாமல் அழுகிறார்கள்.
     பறை மேளத்தின் இசை அதன் உச்சத்திற்கு போகிறபோதெல்லாம் நினைத்துக்கொள்வேன் கல்யாண மேளமும், திருவிழா மேளமும், நலங்கு மேளமும், பொலி எருது மேளமும் இந்த இழவு மேளத்தைப் போல இவ்வளவு துள்ளளாக இருப்பதில்லையே என்று. யாரேனும் தலைவர்கள் இறந்துவிட்டால் வானொலியில் தம்புராவைப் போட்டு அறுத்து வராத துயரத்தை வரவைத்து எல்லோரையும் அழவைத்துக்கொண்டிருப்பார்கள். பறை இழவு வீட்டில் மாளாத துயரத்தில் அழுபவர்களை எல்லாம் இசையால் தேற்றி தாளம் போட வைக்கும். அது ஏன் துக்கத்துக்கு  இப்படி ஒரு துள்ளல் தாளத்தை தேர்ந்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.
       எலந்திக்கண்ணு மாமா ஆக்ரோஷமாய் அடித்துக்கொண்டே ஆடுகிறார். அவரின் ஆட்டம் பார்ப்பவர்களையெல்லாம் ஆடவைக்கிறது நானும் ஆடுகிறேன் எனது பிஞ்சு கால்களால் அடிபோட்டு கைகளை லாவகமாய் அசைத்து உற்சாகமாய் ஆடுகிறேன் எல்லோரோடும் சேர்ந்து. அனைவரின் பார்வையும் எனது ஆட்டத்தில் மையம் கொண்டு மகிழ்வைதைப் பார்த்து ரேணு பெரியப்பா என்னை அலேக்காக தூக்கி முத்தமிடுகிறார் சாராய நெடியோடு அவருடைய மீசைகுத்தியது என்னை.
        மேளம் காய்ச்ச மூட்டியிருந்த தீ எல்லோரையும் தழுவிக்கொண்டிருந்தது. யாரோ ஒருத்தர்  சாராயப் பொட்டலங்களைப் பகிர்ந்துகொடுக்கிறார். அடுத்த சுற்றுக்கு தயாராகிறார்கள் தீயைச் சுற்றி நின்று பழுக்க காய்ச்சுகிறார்கள். அப்போதுதான் கவனித்தேன் பனியில் நமத்த நிலாவைப் பிடித்து காய்ச்சிக்கொண்டிருந்தார் எலந்திகண்ணு மாமா.
   மரண வீட்டின் கானா பாடகர்கள் விடிவதற்கு முன்னாலேயே போய்விட்டார்கள், என்னோடு நடக்க முடியாமல் நிலா விடியலுக்குப்பின் போய்விடும். காமன் இடுகாட்டில் எரிந்துபோவான்.
   நடந்து அலைந்து திரிவது ஒரு மனநோய் பேயைப் போல என்னைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. நடந்து நடந்தே காலத்தைக் கடந்துவிடும் மூர்க்கத்தோடு நடக்கிறேன். நடக்கிறபோதுதான் தீர்வையும் குழப்பத்தையும் கண்டடைகிறேன் நடப்பது ஒரு தரிசனம். நடக்க நடக்க மனம் லாகிரியில் கிறங்கும். நடக்கிற போதை ஏறிக்கொண்டிருந்தது.
     அம்மு சொல்லுவாள் எனக்கு பறவையின் கால்கள்  மனசுக்கு பறவையின் இறக்கைகள் என்று அவள் என்னை ஒரு காதற்பறவை என்றே கொஞ்சுவாள். நான்கு கிலோமீட்டரை நிலா வெளிச்சத்தில் அரைமணி நேரத்தில் நடந்துவிட்டிருப்பேன். எனக்காக நுணா மரத்தடியில் நின்றுகொண்டிருப்பாள் அம்மு குட்டிப்பெண் சௌமியாவோடு. அவளை ஆசையாய் அனைத்து முத்தமிடுகையில் “எப்பா நான் போறன்.” என்று  வெட்கப்பட்டுச் சென்றுவிடுவாள் சௌமியா. அவள் மார்பில் முகம்புதைத்து அம்முவின் மணம்நிரப்பி மூச்சுவிட்டு நிமிர்கையில் வானத்தில் இரண்டு திரட்சியான நிலாக்கள் ஒளிரும். நிலா நேர்நின்று நெருங்கி நிற்கையில் அதன் மூச்சுக்காற்றுப்பட்டு உடம்பெல்லாம் மின்சாரமாய் பாய்ந்து பரவுகையில் அம்மு என அழுத்தி முத்தமிட அம்மு பூரித்து மலர்வாள்.
    “எம்மா! கதை கவிதைனு பித்துப்பிடிச்சு சுத்தறவனா குடும்பத்துக்கு லாயக்குப்பட்டு வருவான் நாஞ்சொல்றவன கட்டிக்கோம்மா...”  என்று அம்முவின் அப்பா சொல்ல அவள் எந்த மறுப்பும் வருத்தமும் இன்றி தலையசைத்தாள். அம்மு என்னை யாரினும் அதிகமாக புரிந்திருந்தாள். அவள் என்னை நன்கு அறிந்திருந்தால் நான் எங்கேயும் தங்காதவன் என்று ஆனாலும் என்னை நேசித்தாள். நானும்தான்.
   நிலா நகர்ந்து நகர்ந்து சோர்ந்திருந்தது. சாலையின் ஓரத்தில் குடைவிரித்து இருள்காத்து  நின்ற அரசமரத்தின் அடியில் கையில் சூலமும் கத்தியுமாக எண்ணெய் பிசுபிசுப்பில் மினுமினுத்து நிற்கிறாள் எல்லையம்மன். ஒன்று பத்து நூறாய் பெருகி உக்கிரமாய் யாருமற்ற சாலையில்  நிலாப்பந்தத்தில் ஊர்வலம் போகிறார்கள் எல்லையம்மன்கள். யாரேனும் அத்துமீறினால் தலைகளை வெட்டி உதிரம் குடிக்கும் கோபாவேசம்.
   சின்னாப்பா பையன் சங்கரும் சந்திரசேகர் முதலியார் மகள் சுமதியும் காதலித்து ஊரைவிட்டு ஓடிப்போனதால் ஊரே சண்டையில் பதற்றமாகி புகைந்துகொண்டிருந்தது சேரியிலிருந்து ஊருக்குள் போகாமல் அச்சுறுத்தல்களால் முடங்கிக் கிடந்தபோது நீலியம்மனுக்கு ஊரணிப் பொங்கல் வைக்க பொறந்தவீட்டு சொந்தங்களாய் அலங்கரித்துக் கிளம்பியிருந்தார்கள் சேரிப் பெண்கள். தாய்வீட்டு சனங்களின் பொங்கல் கூடையெல்லாம் ஒரு ஓரமாய் நின்று  படையலிட்டார்கள். சீட்டிச் சத்தம் ஒன்று சீண்ட மாவிளக்கு ஒளிரும் கூடையிலிருந்து எடுத்தார்கள் நெல்லி பாளக்கத்தியை நிலவு தீவட்டியாய் எரிந்துசெல்ல விளக்கு கிரீடத்தோடு காற்றைக்கிழித்து கத்தியை வீசி வீரமாய் நின்று நடக்கிறார்கள் நீலி. நீலி நீலி எல்லாம் நீலி நீலியை நெருங்கி மீண்டிட முடியுமோ?

   எனக்குள் ஒரு கொடூரமிருகமாக நினைவுகளை வளர்க்கும் நிலவை என்ன செய்வது இதை கவ்வாதோ கொடுஞ்சூன்யம். அந்நாளை எதிர்நோக்கி வேண்டுகிறேன். முகம் தெரியும் பளிங்காய் நீர்நிரம்பி நிற்கும் கிணற்றில் நட்சத்திரங்கள் பூக்கின்றன நிலா முகம் பார்த்து திருத்திக்கொண்டு இறங்கி ஜலக்கிரிடை செய்கிறது. பிடிப்பின்றி ஒரு நாகம் சருக்கி கல்லாய் விழ உடைகிறது பளிங்கு நீர். நிலா பயத்தில் நடுங்குகிறது. நாகம் அப்பமாய் மிதக்கும் நிலவை கவ்வுகிறது அய்யோ! பாம்பு நிலாவை விழுங்குகிறதே என கத்திக்கொண்டு ஓடுகிறேன். நிமிர்ந்து வானம் பார்த்தால் முழுநிலா பாதியாகி இருந்தது. மறுநாள் காலையில் ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள் நிலாவை பாம்பு விழுங்கியதைப் பற்றி. பாவம் இப்படிதான் எப்போதாவது இதுமாதிரி மாட்டிக்கொள்கிறது. இது எனக்கும் கொடுங்கனவாகவே இருக்கிறது.
                              
    லேசான தூரலில் கருப்பு கண்ணாடியாக மாறியிருந்த தார்ச்சாலையில் நிலா மல்லாந்து படுத்துக்கொண்டு  வேகமாக வரும் லாரியைக் கவனிக்காமல்  புரண்டுகொண்டிருந்தது. பதற்றத்தில் நிலாவை நோக்கி பாய்ந்தேன் லாரி எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. யாரும் ரசிக்கவும் சீந்தவும் ஆளில்லாத ஊரிலும் வெளிச்சகீற்று துளைக்க முடியாத அடர்ந்த காட்டிலும் நடுக்கடலின் கருநிற நீர் பரப்பிலும் மணல் மேடுகள் நிறைந்த பாலை மணல்வெளியிலும் இரத்தச் சிவப்பாக நிலா காய்ந்துகொண்டிருந்தது.


 நன்றி: தீராநதி மார்ச் 2014

Wednesday, April 2, 2014

வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதிவைத்துக்கொள்கிறது…


குருஞ்சாக்குளம் இந்த பெயரை தமிழக மக்களுக்கு நினைவில்லாமல் போயிருக்கலாம். ஆனால், கோவில்பட்டி, சங்கரன்கோயில் சுற்றுவட்டார தலித் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1992  மார்ச் 16 -ல் இரவு சினிமா பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர்களை, நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த  23 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்து அவர்களின் ஆணுறுப்பை அறுத்து அவர்களின் வாயில் திணித்துவிட்டுச் சென்ற கொடூரமான நிகழ்வு நடந்தது குருஞ்சாக்குளத்தில்தான்.
இந்த படுகொலை வழக்கு நீதிமன்றத்தில்  சரியான சாட்சிகள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிக்காமலேயே வழக்கைத் தூக்கி பரணில் போட்டுவிட்டது.

1.சர்க்கரை, 2.சுப்பையா, 3.அம்பிகாபதி, 4.அன்பு (அன்பு திருவிழாவுக்காக எஸ்டேட்டிலிருந்து குருஞ்சாக்குளத்திற்கு வந்தவர்) இந்த 4 தலித்துகளும் இப்படி கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிற அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள். குருஞ்சாக்குளத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஆதிக்க சாதியினர் நாயக்கர்கள்தான். ஊருக்கு பக்கத்திலேயே தலித் குடியிருப்புகள். தலித் மக்கள் தங்களின் சாமியான காந்தாரி அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து கோயில் கட்டடத்தை எழுப்புகிறார்கள். காந்தாரியம்மன் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து எதிர்புறத்தில் நாயக்கர்கள் சமூகத்தின் மண்டபம் அமைந்திருக்கிறது. தலித்துகளின் கோயில் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே கட்டுவதா என்று நாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த இடம் குருஞ்சாக்குளம் தலித்மக்கள் பகுதியில் இருக்கும் அரசு நிலம். இவர்களுடைய ஒரே பிரச்சினை தலித்துகளின் சாமியே ஆனாலும் நாயக்கர்களின் மண்டபத்திற்கு எதிரே எழுந்துவிடக்கூடாது என்பதுதான். அங்கேதான் கோயில் கட்டுவோம் என்று எதிர்க்குரல் எழுப்பிய சர்க்கரை சுயமரியாதை மிக்கவராக இருந்தது நாயக்கர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சர்க்கரையையும் அவருக்கு துணையாக இருப்பவர்களையும் கொன்றால்தான் இந்த ஊர் தலித்துகள் அடங்குவார்கள். என்று திட்டம்போட்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்கள். படுகொலை செய்தவர்களை காவல்துறை கைதுசெய்த போது குருஞ்சாக்குளம் நாயக்கர்கள் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். அதில் முக்கியமானவர்கள் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன். இந்த வழக்கை நாயக்கர்கள் தரப்பிலிருந்து நடத்தியவர் அன்றைக்கு அந்தப் பகுதியில் மதிமுகவில் செல்வாக்கு பெற்றிருந்த ராதாகிருஷ்ணன். இவர் இப்போது திமுகவில் மாநில செய்தித்தொடர்பாளராக இருக்கிறார்.
கோவில்பட்டி, சங்கரன்கோயில் இந்தப்பகுதி முழுவதும் நாயக்கர்களின் ஆதிக்கம்தான். இந்தப் பகுதி ஊர்களில் எந்த இடத்திலும் திமுக, அதிமுக, என எந்தக் கட்சியின் கொடிகளோ, சுவர் விளம்பரங்களோ பார்க்கவே முடியாது. எல்லா இடங்களிலும் மதிமுக கொடியும் வைகோவும்தான். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் பாதுகாப்பாக விடுதலை ஆகிறவரை  வைகோ, வைகோவின் தம்பி ரவிச்சந்திரனின் செல்வாக்கு பணம், படை என்று தாராளமாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த கட்சி ஆட்சி என்றாலும் வைகோ நாயக்கருக்கு இங்கு  பெரிய செல்வாக்குதான். அங்கே இவர் பின்னாடி இருப்பவர்கள் இவரின் திராவிட பாரம்பரியம், என்பதற்காகவெல்லாம் இல்லை. இவர் ஒரு நாயக்கர். நாயக்கர் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் வைகோவைக் கொண்டாடுகிறார்கள். வைகோவும் நாயக்கராகவே இருக்கிறார்.
இன்றைக்கு குறிஞ்சான் குளத்தில் நாயக்கர்களின் மண்டபத்தை மறைக்கும்படி வீடுகள் எல்லாம் கட்டிவிட்டார்கள். ஆனால், இன்றைக்கும் அன்று காந்தாரியம்மன் கோயில் கட்டுவதற்காக எழுப்பப்பட்ட பீடத்துடன் அதே நிலையில் நிறைவடையாமலேயே நிற்கிறது. 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த கொடூர நிகழ்வை நினைவுகூறக்கூட தயங்குகிறார்கள் குருஞ்சாக்குள தலித்மக்கள்.

22 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் குருஞ்சாக்குளம் தலித் மக்களின் காந்தாரியம்மன் கோயில்


அப்பகுதியில் எல்லா நிறுவனங்களும் நாயக்கர்களுடையதுதான். பெரும்பாலான நிலமும் நாயக்கர்கள் வசம்தான் உள்ளது. நாயக்கர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிற தலித்துகளுக்கு அவர்களின் காடுகளில் வேலை கிடையாது. அவர்களின் நிறுவனங்களில் வேலை கிடையாது. வேறுவழியில்லாமல் தலித் மக்கள் நாயக்கர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கிப்போக வேண்டியிருக்கிறது. இந்த ஆதிக்க சாதிவெறி நாயக்கர்களின் நாயகனாக இருப்பவர்தான் வைகோ.
இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே ஒரு ஒற்றுமைதான் இருக்கிறது. அது சாதியம். அந்த சாதியம் மாநிலத்திற்கு மாநிலம், வட்டாரத்திற்கு வட்டாரம் அதன் தன்மைகள், சிக்கல்கள் மட்டுமே மாறுபட்டிருக்கிறது. வட தமிழகத்தைவிட தென் தமிழகம் சாதிய அமைப்பிலும் ஒடுக்குகிற ஆதிக்க சாதியினரின் தன்மையும் ஒடுக்கப்படுகிற தலித்துகளின் எதிர்ப்புத் தன்மையிலும் மாறுபட்டதாக மிகவும் இறுக்கமானதாகத்தான் இருக்கிறது.
தென் தமிழகத்தில் ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்கத்தை தலித்கள் யார் எதிர்த்தாலும் அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இப்படி உரிமைக்குரல் எழுப்புபவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அங்கே மற்றவர்கள் யாரும் எதிர்த்து குரல் எழுப்ப முடியாதபடி அச்சுறுத்தப்படுகிறார்கள். அப்பகுதியில் மீண்டும் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு எதிர்க்குரல் எழ ஒரு தலைமுறையாகிவிடுகிறது.
ஆதிக்க நாயக்க சாதிவெறியைத் தூபம்போட்டு அனையாமல் மதிமுக என்ற பெயரில் அரசியலாக காத்துவருகிறார்கள் சங்கரன் கோயில் வட்டார நாயக்கர்கள். ஆதிக்க சாதிவெறி நாயக்கர்கள் செல்வாக்கு கறையை மறைக்கத்தான் வையாபுரி கோபாலசாமி நாயக்கருக்கு ஈழத்தமிழர் அரசியலும், திராவிட அரசியலும், தமிழின அரசியலும் தேவைப்படுகிறது.
இப்போது வையாபுரி கோபாலசாமி நாயக்கர் சாதிவெறி ராமதாஸோடும் மதவெறி பாஜகவோடும் சரியாகத்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்து மதவெறியும் சாதிவெறியும் இரண்டறக் கலந்த ஒன்றுதான். வைகோவின் சாயம் வெளுத்துவிட்டது. வைகோ மீது அவருடைய நாயக்க ஆதிக்க சாதிவெறி செல்வாக்கை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கொதித்துவிடுகிறார்கள் மதிமுககாரர்கள். ஆனால், இப்பகுதிகளில் சென்று விசாரித்தால் தெரியும் வைகோ வையாபுரி கோபாலசாமி நாயக்கராக வீற்றிருப்பது.
குருஞ்சாக்குளம் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் சர்க்கரையை யாரும் மறந்துவிடவில்லை. அதே போல படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றிய வைகோ, வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் இவர்களையும் மறந்துவிடவில்லை. வரலாறு எல்லாவற்றையும் அழிக்க முடியாத எழுத்துகளால் எழுதிவைத்துக்கொள்கிறது


இன்னும் இருக்கிறது குருஞ்சாக்குளம் பற்றி எழுத