Thursday, March 21, 2013

சாத்தானின் சலுகை...


யாம் உனக்கொரு புதிய உலகை
சிருஷ்டித்து இருக்கிறோம்

வியப்பாக இருக்கிறது
நீ பேசுவதும் எழுதுவதும்

முழுவதுமாக் உன்னை என்னிடம் கொடு
உன்னை புதிய உலகிற்கு தயார் செய்ய

யாம் உனக்கொரு புதிய உலகை
சிருஷ்டித்து இருக்கிறோம்
தேவலோகத்தைப்போல

குடைமிளகாயைப் போலிருக்கிறது
உனது மூக்கு

முறத்தைப்போல் காற்றில் அசைகிறது
உனது காதுகள்

ஆழ வேர் பிடித்து நிற்கும்
மரத்தைப் போலிருக்கிறது
உனது கால்கள்

கருந்தேள்கள் ஊரும்
கரும்பாறையைப்போல்இருக்கிறது
உனது உடல்

புதிய உலகில்
ரசிக்கும்படியான இசையாக இல்லை
நீ பேசும் மொழி

புதிய உலகில் வாழ தகுதியின்மை
சுதந்திரமான ஒரு காட்டு மிருகத்தைப்போல்
சிந்த்திப்பதும் செயல்படுவதும்

ஆனாலும் புதிய உலகிற்கு ஆள் சேர்க்கிறோம்
உனது பேரதிர்ஷ்டம் இது

முழுவதுமாக் உன்னை என்னிடம் கொடு
புதிய உலகின் மனிதனாக மாற்றுவொம்

உனது தாய்,தந்தை,மனைவியாலேயேகூட
அடையாளம் காணமுடியாதபடி
நீ விரும்பினால் அவர்களையும்
அழைத்துக்கொள்ளலாம்
புதிய உலகுக்கு
அவர்களையும் மாற்றுவோம்
நீயே அவர்களை
அடையாளம் காணமுடியாதபடி

யாம் உனக்கொரு புதிய உலகை
சிருஷ்டித்து இருக்கிறோம்

அது மனிதர்கள் இறந்த பிறகு
மட்டுமே பார்க்கக்கூடிய
சொர்கத்தைப்போல் இருக்கும்...

                                                - நீலி










Wednesday, March 20, 2013

அன்பின் தொல் படிவங்களை தந்தவள்...


அவள் அளவுக்கு அழகான
வண்ண வண்ணமான கூழாங்கற்களை
மொட்டவிழும் அவளின் கையிலிருந்து
எனது கைகளுக்குள் புதைத்தாள்.
கூழாங்கற்களின் குளுமை
ஆதிமனிதனிலிருந்து கொண்டுவந்து
சேர்த்திருந்தது அன்பின் நீர்ப்பெருக்கில்
இழைத்த பளபளப்போடு
அவள் சிரிப்பினில் மின்னும் அழகு
அவள் புதிய விளையாட்டுகளை உருவாக்குகிறாள்
என்னால் ஒருபோதும் புதிய விளையாட்டுகளை
தனியாக கண்டடைய முடியவில்லை
விளையாட்டுகளை உருவாக்கும் கலையை அவளிடம்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
அவள் நீளமான எனது தலைமுடிகளை
தலையின் இருபக்கமும் நேராக நிற்க வைத்து
என்னை மாடு என்கிறாள்.
அவள் பார்க்கிற எல்லோருக்கும்
அவளைப் பார்க்கிற எல்லோருக்கும்
கூழாங்கற்களைத் தருகிறாள்.
அவள் கடலைத்  துளி நீராய்
அனைத்து வைத்திருக்கும்
அன்பின் தொல் படிவங்கள் நிறைந்த கடற்கரை
கரையெல்லாம் வண்ண வண்ணமான
கூழாங்கற்கள்…