Thursday, October 29, 2015

மாட்டுக்கறி புராணமும், மாட்டுக்கறி அரசியலும்

எனக்கு நினைவு தெரிந்து நான் முதன்முதலில் சாப்பிட்டது மாட்டுக்கறிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இப்போதும் எனக்கு மிகவும் பிடித்தக் கறி மாட்டுக்கறிதான்.
அது தொண்ணூறுகளின் காலம், எனது ஊர்த் தெருவில் மாடு செத்துப்போனால், அதை தூக்கிக்கொண்டு போகச் சொல்லி சேரிக்கு ஆள் அனுப்புவார்கள். அந்த வருடம் ஊரில் யாரு கமுகுட்டி (கண்மாய் கட்டி) வேலை செய்கிறாரோ அவர், சில பேரை அழைத்துக்கொண்டு, சேரியிலிருந்து ஒரு மாட்டுவண்டியைத் தள்ளிகொண்டு போவார்கள். வண்டி கட்டிக்கொண்டு போவது என்பது, அது செத்துபோன மாட்டின் எடையைப் பொறுத்தது. சிறிய மாடாக இருந்தால், நான்கைந்து பேராக சேர்ந்து கொம்பு கட்டி தோள் மீதே தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள்.  ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்கும் ஊரிலிருந்து சேரிக்கு எப்படியாவது செத்துப்போன மாட்டைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள்.
அவர்கள் மாடறுப்பதற்கென்றே ஒரிரு வசதியான இடங்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள். சேரியில் அதை மாடறுக்கும் களம் என்றே சொல்வார்கள். சேரியில் மாட்டுக்கறி வேண்டும் என்பவர்கள் களத்துக்கு பாத்திரங்களைக் கொண்டு செல்வார்கள். மாடறுப்பது என்பதே ஒரு தனி கலை. மாட்டை அறுக்க தெரியாமல்  தோலில் ஓட்டை விழும்படி அறுத்தால் மாட்டின் தோல் விலை போகாமல் வீனாகிவிடும். அதனால், அதை கவனமாக அறுப்பார்கள். அதுமட்டுமல்லாமல், தோல் விற்ற பணத்தில் பாதியை மாட்டின் சொந்தக்காரருக்கும் தர வேண்டும்.
கமுகுட்டி தனக்கு தேவையான அளவு கறியை எடுத்துக்கொண்டது போக, மீதமுள்ள மொத்த கறியையும் வந்திருப்பவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பார். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஊர்த் தெருவிலிருந்து சிலர், மறைவாக யாருக்கும் தெரியாமல் ஒரு பாத்திரத்தோடு வந்து அதில் மாட்டுக்கறியை  போடச் சொல்லி வாங்கிக்கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு காசநோய் என்பதால், காசம் குணமாவதற்கும், எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததாக சொல்லிக்கொள்வார்கள். சில ஊர்த் தெருக்காரர்கள், பறையர்கள் மாடறுப்பதையும் அங்கு நடக்கும் அவர்களின் பேச்சுகளையும் இழிவாகப் பார்த்தும், ஏளனமாகச் சிரித்தும் செல்வார்கள்.
சேரிக்காரகள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிற மாட்டுக் கறியை, சிலர் அன்றே சமைத்து சாப்பிடுவார்கள். சிலர், அதை வத்தலாக காய வைத்து தோலாட்டியாக மாற்றி சமைத்து சாப்பிடுவார்கள். அதிகபட்சமாக உள்ள கறியை, பெரும்பாலும் வத்தலாக காய வைத்து சாப்பிடுவார்கள். இந்த வத்தலை ஒரு 3 மாதங்களுக்கு வைத்திருந்து சாப்பிடுவார்கள். தோலாட்டிக் குழம்பை ஒருமுறை ருசித்தவர்கள் நிச்சயமாக மாட்டுக்கறி சாப்பிடுவதை விடவே மாட்டார்கள். அமெரிக்காவில் கூட ஜெர்க்கி என்று தோலாட்டியை பளபளப்பான பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதாக எனது தோழி ஒருவர் சொல்லியுள்ளார்.
சரி, இவர்கள், செத்த மாடு மட்டும்தான் சாப்பிட்டார்களா என்றால் இல்லை. பெரும்பாலும், , திருவிழா, தீபாவளி போன்ற பண்டிக நாட்கள், விஷேஷ நாட்கள், அடுத்து, மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற நாட்களில் என, ஒரு மாட்டை விலைக்கு வாங்கி அறுப்பார்கள். அதற்காக சிலர் பங்கு சேர்வார்கள். எனக்கு நினைவு தெரிந்து அப்போது ஒரு பங்கு இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்றிருந்தது. ஒரு பங்கு என்றால் ஒரு கிலோ இல்லை. ஒரு மாட்டின் விலை அப்போது ஆயிரம் ரூபாய் என்றால், அதை இருபது பேர் பங்கு சேர்ந்து வாங்குவார்கள். ஒரு பங்கு என்பது இரண்டு கிலோவுக்கு மேல் இருக்கும். இங்கேயும் சிலர் ஊர்த் தெருவிலிருந்து பணத்துடன் மாட்டுக்கறி வாங்க வருவார்கள். சில நேரங்களில் கறி சேரிக்காரர்களுக்கே போதவில்லை என்றாலும் ஊர்க்காரர்களுக்கு கொஞ்சமாகவேனும் கொடுத்து அனுப்புவார்கள்.
இந்த மாடறுப்பு என்பது பெரும்பாலும், விடியற்காலையில்தான் நடக்கும். அப்போதுதான் காலை நேர உணவுக்கு மாட்டுக்கறியை சமைத்து சாப்பிட முடியும். மாட்டின் ரத்தம் பிடித்து பொறியல் செய்வார்கள். அது தாளித்த மணத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கறியை குழம்பாக சமைப்பார்கள். அதில், மசாலா, மிளகாய்தூள் போடுவதற்கு முன்பு, தாளித்த அவித்த மாட்டின் நல்லி எலும்புகள், கறியுடன் கொஞ்சம் அதன் ரசம் ஊற்றி தருவார்கள். சாப்பிட்டு முடிக்கும்போது நிச்சயமாக ஒரு புதிய பலம் வந்ததாகவே உணர முடியும். பின்னர், சோறுடன் மாட்டுக்கறி குழம்பை சாப்பிடுவது ஒரு கொண்டாட்டமாகவே சாப்பிட்டு முடிப்பார்கள்.

இப்படி இந்த மாட்டுக்கறி சாப்பிடும் புராணம் ஒரு பக்கம் இருந்தாலும், சாதி இந்துக்களின் வயல்களில் சேரி மக்கள் வேலை செய்யும்போது ஏதேனும் சிறிய தவறு செய்துவிட்டால், அல்லது வேலை செய்கிற இடத்தில் ஏதேனும் வாய்ச் சண்டை வந்துவிட்டால், “செத்த மாட்டை துண்ற பறப் பசங்க.” என்று திட்டுவார்கள். ஒருமுறை செத்த மாட்டை துண்ற பறையனுங்க இவனுங்க என்று  இழிவாக பேசியபோது, ஒரு முள் கம்பியாள், அடித்ததைப் போன்ற வலியாலும், அவமானத்தாலும் துடித்துப் போனேன். அந்த சிறுவயது வலியும் அவமானமும்தான் அப்போது, என்னை  இனி செத்தமாடு சாப்பிடுவதில்லை என்று முடிவெடுக்க வைத்தது.

இப்படி எனக்கு முன்பாகவே, இந்த வலியை, அவமானத்தை உணர்ந்த, எனது சித்தப்பா வயதுடையவர்கள், பக்கத்து ஊர்களில், செத்தமாட்டை அகற்றுவதை எதிர்த்திருக்கிறார்கள். செத்த மாட்டை உண்பதை கைவிட வேண்டும் என சேரி மக்களிடம் எடுத்துக் கூறி கைவிட வைத்துள்ளார்கள். சாதி இந்துக்களின் நிர்ப்பந்தத்தால் செத்த மாடு அகற்றுவதை கைவிட முடியாவிட்டாலும், இந்த சேரி இளைஞர்களின் எதிர்ப்புணர்வால் செத்தமாட்டுக்கறி உண்ணும் பழக்கம் கைவிடப்பட்டது. சில ஊர்களில், சேரிக்கார்கள், செத்தமாட்டை உண்ணக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, அறுக்கப்பட்ட செத்தமாட்டின் கறியில் மண்ணெண்ணெயை ஊற்றி இருக்கிறார்கள். இப்படியான எதிர்ப்பால் சேரிக்காரர்கள் செத்தமாட்டுக்கறி உண்பதை தவிர்த்து விட்டார்கள். சில ஊர்களில் பெரிய சண்டைகளுக்குப் பின்னர், கமுகுட்டி வேலையும் செய்வதில்லை, பறை அடிப்பதில்லை, செத்தமாடுகளை அப்புறப்படுத்துவதும் இல்லை என்பது சாத்தியமானது. எனுடைய இந்த பின்னணியில்தான், தலித்தியம் தமிழில் பறை இசையை உயர்த்திப்பிடித்து எழுந்தபோது, அது என்னதான் மண்ணங்கட்டி புரட்சி இசையாகக்கூட இருந்தாலும், அந்த சிறுவயது அவமானம், இன்றும் அதை இழிவாகக் கருதி பறை அடிப்பதை கற்றுக்கொள்ளாமல் பறை இசையை வெறுக்க வைத்தது. இப்படி, அப்போதே, இந்த மாட்டுக்கறியும் மாட்டின் தோலாலான பறையும் எனக்கு அரசியலாக அனுபவமாகிவிட்டது.

காலப்போக்கில், செத்தமாடு அகற்றுவது ஒழிந்து, இப்போது சேரிகளில் மாட்டுக்கறி உண்பதும், மாடறுப்பது என்பதும், உற்சாகமாக நடந்து வருகிறது. முன்பைவிட, இப்போதெல்லாம் ஊர்த்தெருவிலிருந்து சாதி இந்துக்கள் நிறையபேர் வந்து, மாட்டுகறியை வாங்கிச் செல்கிறார்கள். பக்கத்தில் டவுனில் இருக்கும் அலாவுதீன் பாய் பீஃப் பிரியானி ஓட்டலுக்கு எப்போதாவது சாப்பிடச் சென்றால், அங்கே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தெரிந்த ஊர்த் தெருக்கார்கள் அசடு வழிய சிரிப்பார்கள். சிலர், விசேஷ நாட்களில் சேரிக்கு வந்து பழக்கமானவர்களின் வீடுகளில் சகஜமாக மாட்டுக்கறி சாப்பிட்டுச் செல்கிறார்கள். இப்பொழுதெல்லாம், பக்கத்து கிராமத்தில் இருந்து, பைக்கில் ஒரு பெட்டியில் மாட்டுக்கறியை கட்டிக்கொண்டு, மற்ற கிராமங்களுக்கு மாட்டுக்கறி விற்க வருபவர்கள், ஊர்த் தெருவைத் தாண்டி சேரிக்கு வருவதற்குள் பெட்டி காலியாகிவிடுகிறது. அங்கேயே விற்றுவிற்று அப்படியே சென்று விடுகிறார்கள். இந்த பத்து, இருபது ஆண்டுகளில் விலைவாசி ஏற்றத்தாலும், நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், இன்று மாட்டுக்கறியின் விலை கிலோ இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், இன்னும் ஊர்த் தெரு சாதி இந்துக்கள், காதுபட பேசுகிறார்கள். மாட்டுக்கறி துண்ற பறையனுங்க இவனுங்க, மேளடிக்கிற பறப்பசங்க என்று இழிவாக சொல்வதை கேட்கும்போது மீண்டும் அந்த முள் கம்பியின் விலாசல் எனது வெறும் உடம்பில் விழுகிறது.

இப்படி, மாட்டுக்கறி உண்பது சமூகமயமாகி வெகுகாலமானாலும், இன்னும், இந்த சாதிச் சமூகம் அது ஏதோ சேரிக்காரர்களுடைய உணவாகவே அவர்களை இழிவாக கருதி வருகிறது. சாதி இந்துக்களின் இந்த மனநிலைதான், மாட்டுக்கறி சாப்பிட்டுவந்த நிறைய சேரி மக்களில், கனிசமானோரை மாட்டுக்கறி உண்பதைத் துறந்து வெறுப்பதற்கும் காரணமானது. சேரிகளில் படித்த புதிய தலைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு மாட்டுக்கறி மீது ஒரு ஒவ்வாமையே  உருவாகிவிட்டது. நகரங்களுக்கு குடிபெயர்ந்த படித்த தலித்துகள், சாதி இந்துக்களின் வீடுகள் மத்தியில் தனது சாதியை மறைத்து வாழும் தலித்துகள் மாட்டுக்கறி சமைப்பது என்பதையே விட்டுவிட்டார்கள். ஆனாலும், இப்போதும் இழிவாக சொல்கிறார்கள், மாட்டுக்கறி துண்ற பறையனுங்க இவனுங்க. இப்படி மாட்டுக்கறி என்பது எனக்கு  நினைவு தெரிந்த நாளாகவே அரசியலாகத்தான் இருந்து வருகிறது.

தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு மாட்டுக்கறி உண்பது இந்தியாவில் பெரிய அளவில் அரசியலாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைவரும் மாட்டுக்கறி பிரச்சினை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இது அனைத்தும் அரசு ஆதரவுடன் நடந்துகொண்டிருக்கிறது. அரசு கண்டும் காணாதுபோல இருக்கிறது. இப்படி ஒரு பதற்றமான சூழலால் நாட்டில் சகிப்புத் தன்மை காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதை அரசுக்கு திரும்ப அளிக்கிறார்கள்.

இந்த நாட்டில், இதற்கு முன்பும் மாட்டுக்கறி என்பது அரசியலாகத்தான் இருந்தது. அப்போது ஏன் இந்த எழுத்தாளர்கள் குரல்கொடுக்க வில்லை என்று கேட்டால், அது மூர்க்கத்தனமாகத்தான் இருக்கும். சரி இப்போதாவது இவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்களே என்று வரவேற்போம். அதுமட்டுமல்லாமல், காலம்தான் போராட்டத்தையும் போராட்ட வடிவத்தையும் தீர்மாணிக்கிறது.

இன்று சாதி இந்துத்துவவாதிகள் பசு இந்துக்களால் வணங்கப்படுகிறது. அதனால், யாரும் உண்ணக்கூடாது என்கிறார்கள். உண்மையில் மறைவாக அவர்களும் மாட்டுக்கறி உண்பவர்கள்தான். மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று சொல்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாட்டைப் பிடித்து தண்ணீர் கூட காட்டாதவர்கள். மாட்டைப் பற்றி அடிப்படையான விஷயம்கூட தெரியாதவர்கள்தான். உண்மையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை அனைவரும் விட்டுவிட்டால், மாடு என்கிற ஒரு இனம் இந்தியாவில், அடுத்த 20 ஆண்டுகளில் முழுவதுமாக அழிந்துவிடும் என்பதை அறியாதவர்கள். விவசாயம் எந்திரமயமாகி அழிந்துகொண்டிருந்தாலும், விவசாயத்தில் பெரும்பங்கு வகித்த கால் நடைகள் அழியாமல் எப்படி தங்கி இருக்கின்றன என்று கேட்டால், நிச்சயமாக மக்களிடம் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இருப்பதால்தான், மாடுகள் பாதுகாத்து வரப்படுகின்றன என்பது உண்மை. ஒருவேளை இவர்கள் எண்ணம்போல, மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டால், இதனால், வரும் பாதிப்புகள் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று சொல்லும் சாதி இந்துத்துத்துவவாதிகளைத்தான் வந்து சேரும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

சாதி இந்து மதவெறியர்கள் சொல்வதைப் போல, அவர்கள் மட்டும்தான் பசுவை வழிபடுகிறார்களா? தலித்துகளும் பசுவை வழிபடுகிறவர்கள்தான். பசுவை வழிபடுவதனாலேயே பசு மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்றாகிவிடுமா?. அவர்கள், ‘கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மறவர்…’ என்று உறக்கப் பேசும் நமது பழம்பெரும் சங்க இலக்கியங்கள் குறித்து அறியாமல், தமிழ் பாரம்பரியத்திலேயே மாட்டுக்கறி உண்பது இல்லை என்று சொல்கிறார்கள். உண்மையில், பசுவை வணங்குவதோடு மட்டுமில்லாமல், அதை திண்று செரித்து தமது உடலின் அணுக்களில் செலுத்தி பசுவும் அவர்களும் ஒன்றாகி, பசுவுக்கு மரியாதை செலுத்துபவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள்தான்.

அரசின் மதவாத, பாசிச போக்கால் இந்தியா முழுவதும் மதச்சார்பின்மையை நம்புகிறவர்கள் மத்தியில் ஒரு பதற்றம் உருவாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, முற்போக்காளர்கள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை நடத்துகிறார்கள். இவர்களை முற்போக்காளர்கள், என்று சொல்வதோடு இப்படியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். முற்போக்காளர்களாக போராட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலும், கம்யூனிஸ்ட்களாகவும், பெரியாரிஸ்ட்களாகவும், தலித்துகளாகவும், முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அரசின் மதவாத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிட்டதட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் (தமிழைத் தவிர), சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களில் சிலர் தாங்கள் பெற்ற விருதை திருப்பி அளித்திருக்கிறார்கள். இந்த அரசை எதிர்த்து, ஒரு எளிய எழுத்தாளன் அரசு அளித்த விருதை திரும்ப வீசி எரிந்து  எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு எப்படி அவனால், எதிர்க்க முடியும்?. இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது, சகோதரத்துவத்தின் மீது, பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த எழுத்தாளர்களின் நம்பிக்கை சிதையும்போது எதிர்ப்பு தெரிவிக்க இந்த வழியைத் தவிர, எழுத்தாளர்களுக்கு வேறு வழி இல்லை. அவர்களால், அரசியல் வாதிகளைப் போல, இயக்கத் தலைவர்களைபோல, வீதிகளில் இறங்கி இயக்கம் கட்டி போராட முடியாது. அப்படி அவர்களிடம் கோரவும் முடியாது. எழுத்தாளர்கள் விருதை திருப்பி அளித்த செயலுக்கு,  இந்த அரசு தலைகுணிந்து மன்னிப்புக்கோரி தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.

தமிழைத் தவிர கிட்டதட்ட  அனைத்து இந்திய மொழியிலும் தங்கள் விருதுகளை திருப்பியளித்த சில எழுத்தாளர்களுக்கு, தமிழக முற்போக்காளர்கள் (கம்யூனிஸ்ட்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், தலித்துகள், முஸ்லிம்கள்)  ஆதரவு தெரிவித்து அவர்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பங்கள், தமிழில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களின் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?  இந்த கேள்வி மூலம் அவர்களிடமிருக்கும் விருதை பிடுங்கி அரசிடம் கொடுக்க வேண்டும் என்பதல்ல. ஒருவேளை, தமிழில் விருதுபெற்ற அனைவருமே பாஜக அரசு ஆதரவாளர்களா? ஒருவர்கூட இந்த முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள் இல்லையா?  என்றால் இல்லை.  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பெரியாரிஸ்ட்டுகளும் கனிசமாக  இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த அளவில், பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, ஈரோடு தமிழன்பன், சு.வெங்கடேசன், டி.செல்வராஜ், வைரமுத்து இப்படி நிறைய இருக்கிறார்கள். ஆனாலும்,  முற்போக்காளர்கள், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு கூட்டம் நடத்த வெளி மாநில எழுத்தாளர்களை அழைத்துவர வேண்டியுள்ளது. அந்த எழுத்தாளர்கள் பாவம், இந்த முற்போக்கு முகாமைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளரும் இல்லை என்று நம்புகிறார்கள் என நான் நம்புகிறேன். அப்படியானால், உண்மையில், இந்த தமிழ் முற்போக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழ் எழுத்தாளர்களின் விருதை பிடுங்கி அரசிடம் ஒப்படைப்பதா? இல்லை.

தமிழகத்தில் மாட்டுக்கறி எல்லா சாதி மக்களாலும் உண்ணப்பட்டு சமூகமயமாகி வெகுகாலமானாலும், அதை பகிரங்கமாக ஒத்துக்கொள்வதில் அவர்கள் அசிங்கப்படுகிறார்கள். அதற்கு காரணம், பொதுபுத்தியில் மாட்டுக்கறி தலித் சாதிக்குரிய உணவாகக் கருதி இழிவாகப்  பார்க்கப்படுகிறது. இந்த மனநிலையை மாற்றாமல், அண்டா அண்டாவாக மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் செய்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

மாட்டுக்கறி உணவை ஆதரிப்பவர்கள், மதவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புபவர்கள், உங்கள் வீடுகளில் வெளிப்படையாக மாட்டுக்கறி சமையுங்கள். பக்கத்து வீட்டில் இருப்பவரையும் ஈர்க்கும்படி மணக்க மணக்க மாட்டுக்கறி சமையுங்கள். மாட்டுக்கறி உணவை வெளிப்படையாக மேலும், பரவலாக்குங்கள். இதைவிட்டுவிட்டு, முற்போக்காளர்களே உங்கள் பாதுகாப்பான போராட்டங்களால், உங்களையும் அறியாமல், மாட்டுக்கறி தலித்துகளுக்கு மட்டுமே உரியது என்று இலவசமாக காப்புரிமை வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். மேலும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை சென்னையில் அம்பேத்கர் திடலில் நடத்தியதைப் போல, தலித்துகள் இடத்திலேயே நடத்தி அவர்களுக்கு இழிவை சொந்தமாக்காதீர்கள். சாதி ஒழிப்பு போராட்டமானலும் சரி, மாட்டுக்கறி உண்ணும் போராட்டமானாலும் சரி ஊர்த் தெருக்களில்தான் நடத்த வேண்டியிருக்கிறது. மாட்டுக்கறி இங்கு சமூகமயமாகி வெகுகாலமாகிவிட்டது என்பதை வெளிப்படையாக அனைவரையும் ஒப்புக்கொள்ள வைக்காமல், நீங்கள், உங்கள் வீடுகளில், மாட்டுக்கறி உண்பதை பகிரங்கமாக நடைமுறைப்படுத்தாமல் நீங்கள் செய்யும் செயலின் விளைவுகள் எல்லாமே தலித்துகளின் தலையில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இறுதியாக மாட்டுக்கறி எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு சொலவடை சொல்லப்படுவதுண்டு  “கன்று ஈனாத காராம்பசுவின் மாமிசத்தைச் சாப்பிட்டால், ஆண்மை அதிகரிக்கும்.”


(மாட்டுக்கறி அரசியல் குறித்து எழுத இன்னும் இருக்கிறது…)

Saturday, October 17, 2015

உயிருடன் இருப்பது மிக முக்கியம்

ண்டமார்களே! இனி நான் எனக்கு சுயமரியாதை வேண்டும் என தங்களை எரிச்சலடைய செய்ய மாட்டேன்.

ஆண்டமார்களே! தங்களைக் கோபப்படுத்தும்படி நான் எதையும் செய்ய மாட்டேன்.

ஆண்டமார்களே! நிச்சயமாக தாங்கள் கம்பீரமாய் பேசும் சுயமரியாதை போராட்டங்களிலும், கட்சிக் கூட்டங்களிலும், சுதந்திரதின விழாக்களிலும் கலந்துகொண்டு கொடி பிடிப்பேன்.

ஆண்டமார்களே! தங்களுக்கு கொடி பிடிப்பேன், தங்களின் பதாகை ஏந்துவேன். தங்களை அடிவயிற்றிலிருந்து வாழ்த்திப் பாடுவேன்.

சர்வ வல்லமை பொருந்திய ஆண்டமார்களே! நான் நிச்சயமாக தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல அடிமையாக இருப்பேன்.

ஆண்டமார்களே! தாங்கள் கருணைகொண்டு இடது கையால் வீசி எறிவதை வலது கையால் பெற்றுகொண்டு தங்களின் மேன்மையையும் கொடையையும் பற்றி பெருமை பேசுவேன்.

ஆண்டமார்களே! கர்ண பிரபுக்களே! தாகத்துக்கு தண்ணீரோ, புத்துணர்ச்சிக்கு தேனீரோ, அதை சிரட்டையிலோ, அல்லது , பிளாஸ்டிக் கிளாசிலோ, அல்லது தங்கக் கோப்பையிலோ எதில் கொடுத்தாலும் எந்தப் புகாருமின்றி அமிர்தமாய் குடிப்பேன்.

எஜமானர்களே! சாமிமார்களே! தங்களுக்கு சமமாக வர கனவிலும் கூட நினைக்க மாட்டேன்.

ஆண்டமார்களே! அரசியல் பற்றி அரைகுறையாகக் கூட பேசவோ இல்லை நினைக்ககூட மாட்டேன்.

ராஜாமார்களே! எனக்கென எந்த அடையாளங்களையும் உருவாக்கிக்கொள்ளமாட்டேன்.

மாண்புமிகு ஆண்டமார்களே! தங்களையன்றி எனக்கு வேறு முகவரியும் வரலாறும் இல்லை என்பேன். அப்படி ஏதேனும் இருந்தால் நானே அழித்துவிடுகிறேன்.

ஆண்டமார்களே! நான் வானத்தை நிமிர்ந்து பார்க்கவே மாட்டேன் என்று ஒட்டு வைக்கிறேன்.

சாமிமார்களே! நான் ஆண்ட வீட்டம்மா கண்களில் படவே மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் அய்யாவே!

ஆண்டமார்களே! நீங்கள் கம்பீரமாய் காலால் இடும் வேலையை நான் பயபக்தியுடன் எனது கைகளால் செய்வேன்.

என்னை ரட்சிக்கும் ஆண்டமாரே! என்னையும் அறியாமல் குற்றம் குறைகள் நேர்ந்தால் எனது சிறத்தை தங்கள் பாதங்களில் பதித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜாமாரே! நியாயமாரே! சாமிமாரே! என் மீதான குற்றச்சாட்டுகளை எந்த விசாரணையும் இன்றி மன்னித்து அருளுங்கள்.

ஆண்டமாரே! நான் நிச்சயமாக எனது வரலாறு குறித்து இனி பேசவே மாட்டேன்

சாமிமாரே! நிச்சயமாக எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எங்கள் தெருவில் மட்டுமே மாரியம்மாவை கும்பிட்டுக்கொள்கிறேன்.

ஆண்டமார்களே! மிக விரைவாகவே செருப்பு இல்லாமல் நடக்க நான் எனது கால்களைப் பழக்கிக்கொள்கிறேன்.

ஆண்டமார்களே! என்றென்றைக்கும் தங்களின் விசுவாசமுள்ள ஆண்டி ஒருபோதும் தங்களின் அம்பாரம் கணக்கு கேட்கமாட்டேன்.

சாமிமார்களே! தங்கள் கருணையால் அல்லவா நான் வாழ்கிறேன் என்னை மன்னியுங்கள் ஆண்டமாரே!

ஆண்டமாரே! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ள மாட்டேன் என ஒட்டு வைக்கிறேன்.

சாமிமாரே! அவர்கள் மனம் பேதலித்து புரட்சி பேசுகிறார்கள் நான் தங்களின் தீவிர விசுவாசி ஆண்டமாரே!

சாமியே! அய்யாவே! எனது சகோதரர்களின் தவறுகளுக்காக என் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

சாமியே! ராஜாவே எனது சகோதரர்களின் குற்றங்களுக்காக என்னை தண்டித்து விடாதீர்கள்.

அய்யாமாரே! தாங்கள் விரும்பினால் நான் எனது சகோதரர்களின் திட்டங்களை உளவறிந்து சொல்கிறேன்.

ஆண்டமார்களே! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களின் ஏச்சுகளால் ஒரு போதும் நான் உணர்வு பெற்றுவிட மாட்டேன் என்பதை நம்புங்கள்.

சாமிமார்களே! எனக்குத் தெரியும்! தங்களை எதிர்க்கும் எனது சகோதரர்களை சம்ஹாரம் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஆண்டமார்களே! நீங்கள் எப்போதும் என்றென்றைக்கும் சகல உரிமைகளோடும் ஆள நான் எம்மை ஒப்புக்கொடுக்கிறேன்.

சாமிமார்களே! தங்களின் அடிமை என்பதைத் தவிர நான் என்னை ஒரு போதும் மனிதன் என்று கூட உணரமாட்டேன்.

ஆண்டமார்களே! அய்யாமார்களே! சாமிமார்களே! என் விசுவாசத்தின் மீது துளியளவும் ஐயம் கொள்ளாதீர்கள்.

ஆண்டமார்களே! நீங்கள் எப்போதும் என்றென்றைக்கும் சகல உரிமைகளோடும் ஆள நான் எம்மை ஒப்புக்கொடுக்கிறேன்.

ராஜாமார்களே! சாமிமார்களே! தங்களின் பழம்பெருமை மிக்க சட்டங்களால் எம்மை ஆளுங்கள்.

ஆண்டமார்களே! அய்யாமார்களே! சாமிமார்களே! தங்களின் மேன்மைக்கு நன்றி! தங்களின் கருணைக்கு நன்றி! உயிருடன் இருப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்...