Wednesday, August 23, 2017

‘அணிகள் இணைந்தது’ ஒரு அபத்த நாடகம்!

சிறப்புக் கட்டுரை: ‘அணிகள் இணைந்தது’ ஒரு அபத்த நாடகம்!

தமிழக ஊடகங்களைக் கடந்த 6 மாதங்களாகப் பீடித்திருந்த ஒரு கோட்டித்தனம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து அவர்கள் வேறு ஏதேனும் ஒன்றை இதேபோல பின்தொடரலாம். வாழ்க ஜனநாயகத்தின் நான்காவது தூண்.

தமிழக அரசியல் எப்போதுமே தனிமனித ஆளுமைகளின் பிம்பத்தைக் கொண்டே கட்டியமைக்கப்பட்டுவந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பிம்பம் ராஜகோபாலாச்சாரியார். இவருக்கு அடுத்து காமராஜ். காங்கிரஸுக்கு மாற்றாக உருவான திமுகவின் பிம்பம் அண்ணாதுரை. அண்ணாவுக்குப் பிறகு திமுகவின் பிம்பம் கருணாநிதி. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவின் பிம்பம். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பிம்பம் ஜெயலலிதா. இப்படி பிம்பங்களை மையமாக வைத்தே தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் அறியப்பட்டுவந்துள்ளன.

இந்த பிம்பங்கள் உருவானதில் ஒன்றை கவனிக்க வேண்டும். ராஜாஜி வாழ்ந்த காலத்திலேயே காமராஜ் ஒரு பிம்பமாக உருவாவதற்கு அனுமதிக்கப்பட்டது. அண்ணாதுரை வாழ்ந்த காலத்திலேயே அவர்களுடைய தம்பிகள் தனி ஆளுமைகளாகத் திகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. திமுகவுக்குத் தலைமையேற்ற கருணாநிதி காலத்திலும் எம்.ஜி.ஆர். போன்ற பிம்பங்களும் கட்சியில் முகியத்துவம் பெறுவதற்கான சூழல் இருந்தது. எம்.ஜி.ஆர்., தன்னை அறியாமலேயே, தனது கட்சியின் அடுத்த அரசியல் பிம்பமாக ஜெயலலிதாவை விட்டுச் சென்றார். திமுக தலைவர் கருணாநிதி முதுமையில் உடல் நலக் குறைவால் இருக்கிறார். அவர் இருந்த இடத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவின் அடுத்த பிம்பமாக எழுந்துள்ளார்.
ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் முதலமைச்சராகவும் மறைந்த ஜெயலலிதா, தனக்குத் தெரியாமல்கூட யாரும் அதிமுகவின் அடுத்த பிம்பமாக எழுந்துவிடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அப்படி பிம்பமாக மாறும் வாய்ப்புள்ள யாரையும் அவர் தனது கட்சிக்குள்ளும் தனது வாழ்க்கைக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இதன் விளைவு ஜெயலலிதா என்ற பிம்பம் மறைந்த பின், அதிமுகவின் பிம்பம் என்பதே ஒன்று இல்லாமல்போனது. இப்போது, பிம்பமாக மாறுவதற்கு எந்தக் கூறுகளும் இல்லாதவர்கள்தான் கடந்த 6 மாதங்களாக அதிமுகவின் தலைமைப் பொறுப்பையும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்ற உச்சபட்ச நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிம்பங்களின் தலைமையில்தான் ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி செயல்பட வேண்டும் என்று இதன் பொருள் அல்ல. ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரை பிம்பங்களாக மாறாதவர்கள் மக்களைக் கவர முடியாது என்பதுதான் யதார்த்தம். பிம்பங்களாக உருப்பெறாத ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டிவி. தினகரன் ஆகியோரின் பிரிவால் அதிமுக பிரிவதும் சேருவதுமாக நாடகம் நடக்கிறது.

அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றத் துடிக்கும் இவர்கள் பிம்பமாக மாற வேண்டும் என்றால், தங்களை மக்கள் பக்கம் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டையாவது இவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களோ நாற்காலியின் பக்கம் மட்டுமே தங்களை நிறுத்திக்கொண்டார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஜி.எஸ்.டி.க்கு ஒப்புதல் அளித்தார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். இவர்களின் அரசியல் நிலைப்பாடு இப்படி ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கிறது.

பன்னீர் செல்வமும் பழனிசாமியும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு வீசிக்கொண்டும், அணிகள் இணைப்பு என்று பேசிக்கொண்டும் இருந்தபோதுதான், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போரட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோதுதான், தங்கள் மண்ணையும் குடிநீரையும் பாழாக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து கதிராமங்கலத்தில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஈபிஎஸ், ஓ.பி.எஸ்ஸுக்குத் துணை முதல்வர் பதவி தந்து அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தபோதுதான், தமிழக விவசாயிகள் டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரியும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அணிகள் இணைந்தன, இனி பிரிவில்லை என்று கூறியபோதுதான் தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஓபிஎஸ் அணியினர் பதவி, அதிகாரம் என இலக்கை அடைந்துவிட்டார்கள். எடப்பாடி அணியினரின் சட்டமன்ற பலம் கூடிவிட்டது. இரு அணியினருக்கும் வேண்டியது கிடைத்துவிட்டது. மக்களுக்கு வேண்டியது எப்போது கிடைக்கும்? அவர்கள் பிரச்சினைகளுக்கு யார் தீர்வு சொல்வார்கள்? நெடுவாசலில், கதிரமங்கலத்தில், டெல்லில் போராடுபவர்களுக்கு என்ன பதில்? விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நீட் விஷயத்தில் மாணவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அதிமுக அணிகள் இணைந்து நாற்காலிகள் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டன.
இதை நம் காலத்தின் மாபெரும் அரசியல் அபத்த நாடகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

Sunday, April 9, 2017

புரட்சிகர அரசியலில் இருந்து விடைபெற்றார் கத்தார்!



புரட்சிகர அரசியலில் இருந்து விடைபெற்றார் கத்தார்!
விட்டல் ராவ் என்ற நாட்டுபுறப் பாடகன் ஒலிபெருக்கியின்றி ஆந்திர மாநிலத்தின் வீதிகளில் இறங்கிப் பெருங்குரலெடுத்துப் பாடினான் என்றால் அவனைச் சுற்றி பத்தாயிரம் மக்கள் கூடிவிடுவார்கள். அவனுடைய பாடலின் உஷ்ணம் சுற்றி இருப்பவர்களின் உடலில் ஏறி இருக்கும். புரட்சி நெருப்பு கனலும் அவனின் கம்பீரக் குரலைக் கேட்டு ஆந்திர அரசே நடுங்கியது. அந்த விட்டல் ராவ் வேறு யாருமல்ல, இந்தியாவின் தீவிர இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சியான மாவோயிஸ்ட் மக்கள் யுத்தக்குழுவின் பிரசாரப் பாடகரான கத்தார் தான் அவர்.
அன்றைய ஆந்திர மாநிலத்தில் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரான் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு ஒரு தலித் குடும்பத்தில் சேஷய்யா - லச்சுமம்மா தம்பதியருக்கு கத்தார் மகனாகப் பிறந்தார். கும்மிடி விட்டல் ராவ் என்ற இயற்பெயர் கொண்ட கத்தார் சிறு வயதிலிருந்தே தீண்டாமையின் கோரப் பற்களை நேருக்கு நேராகச் சந்தித்தார். இன்றைய தெலங்கானா பகுதிகளில் மிகக் குறைந்த சதவிகிதமே உள்ள ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட மக்களை சுரண்டுவதையும், அடக்கி ஒடுக்குவதையும் கண்டு சீற்றம் கொண்டார். அதனால், இயல்பிலேயே அவருக்கு ஆதிக்கத்தை எதிர்க்கும் புரட்சி மனம் இருந்தது.
1969ஆம் ஆண்டில் தெலங்கானா மாநில போராட்டம் வெடித்தபோது, மகாத்மாக காந்தி பெயரில் ‘புரக்கதா’ என்ற கதைப்பாடல் வடிவ கலைக்குழுவை உருவாக்கி போராட்டத்தில் களம் இறங்கினார். பின்னாளில், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிற மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் யுத்தக்குழுவின் பிரசாரத் தளபதியானாலும், அவரின் தொடக்கம் மகாத்மா காந்தி என்றே அறிய முடிகிறது. அதன் பிறகு, அரசின் விளம்பரத்துறையில் குடும்பக் கட்டுப்பாடு, பெண் குழந்தைகள் முன்னேற்றம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரமாக எடுத்துச் சென்றார். விட்டல் ராவின் கம்பீரக் குரல், கலைத் திறன், திரைப்பட இயக்குநர் நர்சிங் ராவ் அவர்களை ஈர்த்தது. கத்தாரின் இயல்பும் சமூகப் பின்புலமும் நர்சிங் ராவ் மூலம் விரைவாகவே புரட்சிகர கம்யூனிஸத்தைத் தழுவியது.
ஆந்திராவில் புரட்சிகரமாக செயல்பட்ட மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பிரசாரப் பாடகரானார். கும்மிடி விட்டல் ராவ் என்ற தனது பெயரை, பஞ்சாப்பின் புரட்சிகர இயக்கமான கத்தார் என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக்கொள்கிறார். கத்தார் என்ற சொல்லுக்கு புரட்சி என்று அர்த்தம். ‘ஜன நாட்டிய மண்டலி’ என்ற குழுவை உருவாக்கி ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் மார்க்சிய லெனினிஸ்ட் மக்கள் யுத்தக்குழுவின் பண்பாட்டு பிரிவாக செயல்பட்டு பிரசாரம் செய்தார். 1980-களின் இறுதியில் கத்தார் தமிழகத்துக்கும் வந்து தனது பாடல்களால் புரட்சிக் கங்குகளை தூவிச் சென்றுள்ளார்.
கத்தாரின் கலைவடிவம் அடித்தட்டு மக்களின் கலைவடிவம். அது இயல்பாகவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் அடித்தட்டு மக்களை ஈர்த்தது. கத்தாரின் புரட்சிப் பாடல்கள் அடித்தட்டு மக்களின் மனதில் புரட்சியை விதைத்தது. மக்கள் யுத்தக்குழுவில் இளைஞர்கள் பெருமளவில் தன்னார்வத்துடன் வந்து ஆயுதப் போராட்டத்தில் சேர்ந்தார்கள். அவர்கள் மக்களைச் சுரண்டும் ஆதிக்க வகுப்பினருக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும் ஆந்திர அரசுக்கு எதிராகவும் அறைகூவல் விடுத்தனர். மக்கள் யுத்தக்குழுவினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆந்திர அரசு நிலைகுலைந்தது. ஆந்திர அரசு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை வேட்டையாடியது. ஆனால், பீனிக்ஸ் பறவைபோல, போராளிகள் திரும்ப வந்துகொண்டே இருந்தார்கள். இப்படி மக்கள் கூட்டம் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஈர்க்கப்படுவதற்குக் காரணம், கத்தாரின் பாடல்கள்தான் என்பதை ஆந்திர அரசு அறிந்திருந்தது. வேறு வழியே இல்லாமல், மக்கள் யுத்தக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆந்திர அரசு இறங்கிவந்தது. பேச்சுவார்த்தைக் குழுவில் கத்தார் இடம் பெற்றிருந்தார். அரசு, கத்தாரின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றது. சிலவற்றை நிராகரித்தது. போராளிகளின் எழுச்சியும் தாக்குதலும் அதிகரித்தபோதெல்லாம் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
கத்தார், ‘நாங்கள் வெறுமனே ஆயுதப் போராட்டக்காரர்கள் மட்டுமல்ல; அமைதியை விரும்புவர்களும்கூட’ என்று கூறினார். அரசுக்குக் கோரிக்கைகளை வைத்து, சிலவற்றை நடைமுறை சிக்கல் கருதி விட்டுக்கொடுக்கவும் செய்தார். இதனால், ஒரு புரட்சிகரக் கட்சியின் பண்பாட்டு பிரிவில் இருப்பவர் அக்கட்சியின் கோரிக்கைகளை பேசும் கட்சியின் தூதராக இருப்பது குறித்து கட்சிக்குள்ளேயே கத்தார் மீது சில விமர்சனங்கள் எழுந்தன.
கத்தார் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், மக்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஈர்ப்பது கத்தாரின் பாடல்கள்தான் என்பதை ஆந்திர அரசு அறிந்திருந்தாலும், கத்தாரின் மக்கள் செல்வாக்கு காரணமாகவே ஆந்திர அரசு அவரை உயிருடன் விட்டுவைத்திருந்தது. இனி மக்கள் போராளிகள் பக்கம் போகாமல் தடுக்க வேண்டுமானால், கத்தாரை ஒழிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு முடிவு செய்தது.
அவருடைய தலைமறைவு வாழ்க்கையின்போது 1987ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாதம் அவரைச் சுற்றி வளைத்த ஆந்திர போலீஸ் அவரைச் சுட்டது. அவர் உடலில் பாய்ந்த ஆறு தோட்டாக்களில், ஒன்று இன்னும் அவர் உடலில் மிச்சமிருக்கிறது. புரட்சித் தாகம் தணியாத கத்தார் எப்படியோ உயிர் பிழைத்தார். ஆனால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி இன்னொரு கதையும் உலவிவருகிறது. ஆந்திர அரசுடனான பேச்சுவார்த்தையில் கத்தார் மீது அதிருப்தி கொண்ட மார்க்சிய லெனினிஸ்ட் கட்சி மக்கள் யுத்தக்குழுவினர்தான் அவரை சுட்டார்கள் என்பதுதான் அந்தக் கதை. இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. இந்த வதந்திக்கு இன்று வரை கத்தாரும் பதில் சொல்லவில்லை. அவருடைய கட்சியும் பதில் சொல்லவில்லை.
பின்னர், 2004இல் மார்க்சிய லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் யுத்தக்குழுவும், மா.லெ.கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தியும் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியாக உருவானது. மாவோயிஸ்ட் கட்சியில் தொடர்ந்து பண்பாட்டுப் பிரிவில் மக்கள் கூட்டத்தை சந்திக்கும் பிரசாரக் கலைக்குழுவை நடத்தி வந்தார்.
கால மாற்றத்தில் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிருந்த கத்தார், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், தெலங்கானாப் போராட்டத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். அவருடைய ‘அம்மா தெலங்கானமா...’ என்ற பாடல் தெலங்கானாவின் மாநில வாழ்த்துப்பாடல் என்கிற அளவுக்கு மக்களிடம் புகழ்பெற்றிருந்தது. தெலங்கானா போராட்டத்தில் தனது கம்பீர குரலால் 2 லட்சம் மக்கள் திரளைக் கூட்டினார். தெலங்கானா மாநிலப் போராட்டம் வெற்றிப் பெற்று தனி மாநிலம் உருவானதில் கத்தாரின் பங்கை யாரும் மறுத்துவிட முடியாது.
அவருடைய புரட்சிகர ஆயுதப்போராட்டக் கட்சியும், தனி தெலங்கானா மாநிலமும் அங்குள்ள தலித் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்று உணர்ந்த அவர், கட்சியின் செயல்பாடுகளில் இருந்து கடந்த பத்தாண்டுகளாக விலகியே இருந்தார். தெலங்கானா பிரஜா முன்னணி என்ற அமைப்பை பெயரளவில் மட்டுமே தொடங்கினார்.
இந்தக் காலத்தில்தான் அவருடைய அரசியல் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இத்தகைய நீண்ட புரட்சிப் பயணத்தில் 67ஆவது வயதை நிறைவு செய்திருக்கும் புரட்சிப் பாடகர் கத்தார், கடந்த வாரம், தெலங்கானா மாநிலம், போங்கிர் மாவட்டத்தில் உள்ள யாதத்ரி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார். அந்தக் கோயிலின் மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமியை வணங்கினார். பின்னர், வெளியே வந்த கத்தார் செய்தியாளர்களிடம் பேசும்போது “தெலங்கானா மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நல்ல மழை பொழிந்து, அநீதிக்கு எதிராக போராடும் சக்தியை இறைவன் மக்களுக்கு அளிப்பாராக என்று வேண்டிக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
பின்னர், அங்கிருந்த வேத பாடசாலைக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்த கத்தார், “இயற்கையை நேசிப்பவர்கள் அனைவரும் இறைவனை நேசிப்பவர்கள். வேதங்களையும், ஆங்கிலத்தையும் கற்றால் மாணவர்கள் விவேகானந்தரைப் போல் ஆகலாம்.” என்று கூறினார்.
மார்க்சியம், மாவோயிசம், ஆயுதப் போராட்டம் என்று தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புரட்சிகரவாதியாக இருந்த கத்தார் இப்படி கோயிலுக்குச் சென்று வேதங்களைக் கற்கச் சொல்லியிருப்பது தீவிர இடதுசாரி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தார், இதுபோல கோயிலுக்கு செல்வது இது முதன்முறையல்ல. கடந்த ஜனவரி மாதம் ஜனகம் மாவாட்டத்தில் உள்ள சோமநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
கத்தாரிடம் இந்த மாற்றம் குறித்து, ஏன் இந்த பரிணாமம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நிச்சயமாக இது பரிணாமம் இல்லை. மக்களின் ஜனநாயக ஆன்மிக உணர்வை மதிப்பவனே ஓர் உண்மையான மார்க்சிஸ்ட். மக்கள் பிரச்னைகளை சந்திக்கும்போது சமய நம்பிக்கைகளே அதிலிருந்து அவர்களுக்கு தற்காலிக விடுதலையை அளிக்கிறது. இத்தாலிய அறிஞர் கிராம்சி சொல்கிறார், ‘பூர்ஷ்வாக்களின் பண்பாட்டு மாண்புகள் நாட்டுப்புற கலை, வெகுமக்கள் பண்பாடு, சமயம் ஆகியவற்றுடன் இணைந்திருக்கிறது’ என்கிறார். மாவோயிஸ்ட் இயக்கம் ஆயுதப் போராட்ட நடவடிக்கையில் கடுமையான அடக்குமுறையை சந்தித்திருக்கிறது. அதனால், பொது லட்சியத்தை அடைய நான் நாடாளுமன்ற ஜனநாயக முறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.
ஆந்திரா, தெலங்கானா மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், தனது புரட்சிப் பாடல்களால் புரட்சிகர ஆயுதப்போராட்டக் கருத்துகளை விதைத்த கத்தார் அதிலிருந்து விலகி நாடாளுமன்ற ஜனநாயக அரசியலை நோக்கி வந்திருக்கிறார். எப்படியாயினும், புரட்சிகர அரசியலில் இருந்து விடைபெற்று விட்டார் கத்தார்.
-