Wednesday, October 3, 2018

நெருப்பை சீரணிப்பவன்..

அவன் அனல் கனன்று கொண்டிருந்த

நெருப்புக் கங்குகளைச் சுடச்சுட

சாப்பிடத் தொடங்கிய போது

அவன் சாகசக்காரனென்றும்

வினோதனென்றும் பித்தனென்றும்

கதை கதையாய் உலாவந்தன…

அவன் நெருப்பை ருசித்து உண்பது

பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில்தான்

பார்த்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள்

நிலாவின் குளுமையில் நெருப்பு சுடாது என்பானாம்.

சிலர் அவன் விரைவில் இறந்துவிடுவான் என்றார்கள்

சிலர் அவனுக்கு நோய்பிடித்துவிடும் என்றார்கள்.

சிலர் நெருப்பு அவனை சாம்பலாக்கிவிடும் என்றார்கள்

சிலர் அவன் கருகி கரிக்கட்டையாகி விடுவானென்றார்கள்

அவனைச் சாகசக்காரனென்றும்

வினோதனென்றும் பித்தனென்றும் சொல்லி

எல்லோரும் கடந்து சென்றார்கள்…

அவன் சொல்லிக் கொண்டான்

நான் நெருப்பை சீரணிக்கிறேன்

நெருப்புக் குழம்புகள் எனது நரம்புகளில் ஓடுகிறது.

யாருமற்ற தனிமையான இரவுகளில்

எனது உடல் நெருப்பாகிறது.

நான் நெருப்பாகி தீயாக கொழுந்துவிட்டு எரிகிறேன்.

யாருக்கும் தெரியவேயில்லை

நான் தீயாக ஆடுவது…

கனவின்போது..

ஒரு அற்புத கனவின்போது உறக்கம் கலைந்து விழிக்கிறேன்.
கனவைத் தொடர கண்களை மூடுகிறேன்.
கனவு தொடர்வதில்லை...

ஒரு கொடுங்கனவின்போது அதிர்ந்து உறக்கம் கலைந்து பதறி எழுகிறேன்... அந்த கனவை கைவிட கண்விழித்து நிற்கிறேன்.
ஆனால், உறக்கம்கூடி கொடுங்கனவு தொடர்கிறது...