Monday, January 14, 2019

வீரக்கலை


உண்மையில் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கிற கதையை, இந்தக் கதை நடக்கிற நாட்டில்  வாழும் மக்களின் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால், இந்நேரம் அது உலகப்புகழ் பெற்றிருக்கக்கூடும். கெடுவாய்ப்பாக அந்த நாட்டு மக்கள் மொழிக்கு எழுத்துரு எதுவும் இல்லை. எழுத்துருதானே இல்லை, வாய்மொழியாக சொல்லலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், மேலுமொரு மிகப்பெருங் கெடுவாய்ப்பாக அவர்களின் மொழிக்கு பேச்சொலியும் இல்லை. இப்போது நீங்கள் கடுங்கோபத்துடன் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி, “எழுத்தும் இல்லை, பேச்சும் இல்லை பிறகு எப்படி அதை மொழினு சொல்ற..” என்று கேட்பது என் காதில் மிக சன்னமாக விழுகிறது. உண்மையில் அவர்கள் மொழி என்னவென்று எனக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் என்னுடனும், நான் அவர்களுடனும் செய்திகளையும், கருத்துகளையும் பறிமாறிக்கொண்டுள்ளோம். மொழிக்கான பயன்பாட்டினை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அதை மொழி என்று சொல்வதில் உள்ள பிரச்சினையை விட்டுவிடுவோம்.

அந்த நாட்டுக்கு ஆயிரத்தெட்டு பெயர்கள். பொதுவாக அங்கே எல்லாமே ஆயிரங்களில் தான் தொடங்குகிறது. மனிதனின் பெயர், மனைவி, மக்கள்,  ஆயுட்காலம், மன்னர்களின் எண்ணிக்கை, செல்வச் செழிப்பின் அளவு, என எல்லாவற்றையும் அவர்கள் ஆயிரங்களில்தான் கணக்கிடுகிறார்கள். அதனால், அந்த நாட்டின் ஆயிரம் பெயர்களையும் சொல்லி அவற்றின் காரணக் கதைகளையும் சொன்னால் நீங்கள் சுவாரசியம் கொள்ளவோ, சலிப்படையவோ செய்யலாம். அதுமட்டுமல்லாமல், அந்தக் கதைகள் எல்லாம் மிகப்பெரிய நெடுங்கதையாகவும், நீண்ட கிளைக் கதைகளாகவும் இருக்கின்றன. இப்படியான கதைகளில் நீங்கள் தர்க்கரீதியாக ஐயம் கொள்வீர்களாயின் நீங்கள் உண்மையை தரிசிக்கவே முடியாது என்ற சாபத்திற்கு ஆளாவீர்கள். அதனால், மேற்கொண்டு கதையைத் தொடருவோம்,

அந்த நாட்டைக் குறிப்பிடும்போது அதன் ஆயிரம் காரணப் பெயர்களையும் சொல்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால், இனி ஆயிரம் பெயருள்ள நாடு என்று வைத்துக்கொள்வோம். ஒரு சுவாரசியமான தகவல் அங்கே எல்லாமே காரணப் பெயர்தான் இடுகுறி என்பதே கிடையாது.

அந்த நாட்டின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்துகொள்வது நல்லது. அந்த நாட்டின் காலத்தை நீங்கள் வரலாற்றுக் காலம் என்றோ மத்திய காலம் என்றோ, நவீன காலம் என்றோ எப்படியும் வகைப்படுத்த முடியாது. அது எல்லாம் கலந்த கலவையாக இருப்பதால் வரலாற்றாசிரியர்களுக்கு கால வரையரை செய்வது என்பது இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. இதனாலேயே அந்த மக்கள் தங்களைக் காலத்தை வென்றவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆயிரம் பெயருள்ள நாட்டின் மக்களில் சிலர் தங்களையும் தங்கள் நாட்டையும் கடவுள்தான் படைத்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதனால், இவர்களின் வரலாறு அறிவியல் முறையில் அமையவில்லை என்று நீங்கள் ஒதுக்கித்தள்ள முயற்சித்தால் அது முடியாது. ஏனென்றால் அந்த நாட்டு மக்கள் அவர்களின் வரலாற்றை அதே கதையை அறிவியல் முறையிலும் சொல்கிறார்கள். அவர்கள் உலகத்தின் தோற்றத்தை உயிர்களின் தோற்றத்தை பரிணாமத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கச்சிதமாக புனைவை அறிவியலுக்குள்ளும், அறிவியலை புனைவிற்குள்ளும் பொருத்துகிறார்கள். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதாவது அவர்கள் தாங்கள் வானரத்தில் இருந்து முதல் மனிதனாக வெளியே வந்ததிலிருந்து அவ்வளவு தெளிவாக அவர்கள் தங்கள் வரலாற்றைச் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆயிரம் பெயருள்ள நாட்டை ஆள்பவர்களைப் பற்றி சொல்வது என்றால் முடி மன்னர்கள் என்றோ அல்லது ஜனநாயகத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்றோ, அவர்களை தெளிவாக வரையறுப்பது குழப்பமாகவே இருக்கிறது. ஏனென்றால் நான்தான் முன்னமே கூறினேன் இல்லையா, அங்கே எல்லாமே கலவையாக இருக்கிறது என்று. மேலும், அவர்கள் பல தகவல்களை மாற்றிமாற்றி முன்னுக்குப்பின் முரணாக சொல்கிறார்கள். எழுத்தும் பேச்சும் இல்லாத மொழிகொண்ட மக்களைப் பற்றி தெரிந்துகொள்வது கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும் என்று விட்டுவிட்டேன். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அவர்கள் கோருவது, எல்லாவற்றிலும் தாங்கள்தான் முதன்முதல் என்ற உலகம் முழுமைக்குமான வரலாற்றுத் தலைமை என்பதைப் புரிந்துகொண்டேன்.

இந்த ஆயிரம் பெயருள்ள நாட்டின் ஆயிரம் பெயருள்ள மக்களைப் பற்றி மேலதிகமாக விவரித்து உங்களைச் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. ஆனால், அவர்களிடம் மிகவும் பிரபலமான சுவாரசியமான ஒரு கலை வழக்கத்தில் இருக்கிறது. அந்தக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்ள அக்கலையில் வல்லுநரான ஒருவரின் அரங்க நிகழ்ச்சிக்குப் பின்னர், என்னை ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்காரன் என்று சொல்லிக்கொண்டு அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். எப்படி இவ்வளவு பிரமாதமாக நிகழ்த்துகிறீர்கள் என்று வியந்தேன். எங்களின் வீரக்கலைக்கு நிகர் தரணியில் எங்குமே இல்லை என்றார். அவருடைய அந்தக் கருத்து ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது. நேர்காணல் முடிந்த பிறகு எனக்கு விபரிதமான ஆசை ஒன்று தோன்றியது.
கொஞ்சம் தயக்கத்துடன் எனக்கு இந்த வீரக்கலையைக் கற்றுத்தர முடியுமா என்று கேட்டேன்.

ஒரு மெல்லிய புன்னகையுடன் “ஓ… தாராளமாக…” என்று ஒப்புக்கொண்டார்.

“வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு, நாள் நன்றாக இருக்கிறது. நாளைக்கே தொடங்கி விடலாம்.” என்று கூறிவிட்டு அவருடைய முகவரியைக் கொடுத்துவிட்டுக் கூடவே ஒரு ஆளுயர நிலைக்கண்ணாடி ஒரு கூர்மையான வாள் கொண்டுவரச் சொன்னார்.

மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, முந்தின நாள் இரவு வாங்கிய ஆளுயர நிலைக்கண்ணாடி, வாளுடன் சரியாக சூரியோதயத்தின் போது குருதட்சனையுடன் பயபக்தியுடன் அவர் முன்பு நின்றேன்.

குரு வணக்கத்துடன் பயிற்சித் தொடங்கியது. இந்தக் கலையை பயில்வதற்கு மன தைரியம் வேண்டும். எதற்கும் அஞ்சக் கூடாது. என்னவானாலும் கவலைப்படக் கூடாது என்று கூறிவிட்டு அந்தக் கலையின் முதல் நிலையை நிகழ்த்திக் காட்டினார்.

ஒரு ஆளுயர நிலைக்கண்ணாடியின் முன்பு அமர்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு பிணம் உயிர் பெற்று எழுவது போல எழுந்து நின்றார். கையிலிருந்த போர் வாளை மின்னல் வேகத்தில் சுழற்றி சுழற்றி வீசினார். நிச்சயமாக அந்த வீச்சு பூமிப்பந்தின் மீது பட்டிருந்தால் ஒரு எலுமிச்சை பழம்போல இரண்டு துண்டாக விழுந்திருக்கும். ஆனால், என்ன ஆச்சரியம் கண்ணாடிக்கு ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

இப்போது நீயும் இதுபோல, நீ கொண்டுவந்திருக்கும் கண்ணாடி முன்பு நின்று சுழற்று என்று வாளை எனது கையில் கொடுத்தார்.

நானும் அவரைப் போலவே நிலைக்கண்ணாடி முன்பு தானத்தில் அமர்ந்தேன். ஆனால், சாதாரணமாகத்தான் எழுந்தேன். ஒரே வீச்சு கண்ணாடி சுக்கல் நூறாக உடைந்துவிட்டது. நல்ல வேளை எனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

“நான் உங்களைவிட வலுக்குறைவாகத்தான் வீசினேன். ஆனால் கண்ணாடி உடைந்துவிட்டது. மண்ணிக்க வேண்டும்.” என்றேன்.

அதற்கு அவர் ஒரு கர்வப் புன்னகையுடன் “பரவாயில்லை, முதலில் நீ ஒரு சாஸ்வதமான கண்ணாடியை செய்ய வேண்டும்.” என்றார்.

நான் புரியாமல் நின்றேன்.

“பார், என்னுடைய கண்ணாடியைப் போல அது சாஸ்வதமானதாக இருக்க வேண்டும். எவ்வளவு முயன்றாலும் உடைக்க முடியாது. ஏனென்றால் அது தத்துவத்தால் செய்தது.” என்றார்.

நான் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தேன்.

கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள் என்ற எனது குழப்பமான பார்வையைப் புரிந்துகொண்டவர் போல, அவர் தத்துவத்தில் கண்ணாடி செய்யும் முறையைக் கூறினார்.

“மனம் கண்ணாடி, அகம் கண்ணாடி, பூமியின் புறமாய் சூழ்ந்திருக்கிற வானம் கண்ணாடி. எல்லாமே கண்ணாடிதான். அகக் கண்ணாடியை எப்படி பார்ப்பது? அதற்கு உன்னிலிருந்து நீயே உன்னை வேறாக, வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது உன்மீது உனக்கே வெறுப்பு தோன்ற வேண்டும். பின்னர் அப்படியே அதை அகத்திலிருந்து புறத்தில் பிரதிபலிக்க வேண்டும். பின்னர், மனிதர்களை மட்டுமல்ல மூச்சுவிடும் எல்லா ஜீவராசிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நிலம் நீர் என எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு பெருவெறுப்பு வெடித்துக் கிளம்பும். அதில் நீ மட்டும்தான் பிரதானம், ஆதியிலும் முதல்வன் கடைசியிலும் முதல்வன் நீயே என்று உணரவைக்கும். உன்னை ஏற்றுக்கொள்பவர்கள் உம்மினம், ஏற்றுக்கொள்ளாதவர்கள் உம்மினும் கம்மியினம் என்று படிப்படியாக அது ஒரு தத்துவமாக உறுதிப்படும். நீ அடைந்த தத்துவத்தைப் பரப்ப அதைக் கோட்பாடாக்கி விளக்க வேண்டும்.  அப்போதுதான் நீ வைத்திருக்கும் கண்ணாடி சாஸ்வதப்படும். நீயும் இந்த வீரக்கலையின் மகா கலைஞன் ஆவாய்.” என்று உச்சாடனம் சொல்வதைப் போல சொல்லி முடித்தார்.

அவருடைய விளக்கத்துக்குப் பிறகு  அந்தக் கலையை யாரும் கற்றுக்கொள்வது மிகவும் எளிது என்று தோன்றியது. விரைவிலேயே அந்தக் கலையை கற்றுக்கொண்டேன். நானும் அந்தக் கலையில் குறிப்பிடத்தக்க கலைஞனாக மாறியிருந்தேன். பிறகு ஒருநாள் கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் ஒரு மகா மகா கலைஞனின் அரங்க நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களாக வந்திருந்த அத்தனைபேரும் அவரைப் போலவே மகா கலைஞர்களாக இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கலை ஒரு தொற்று நோயைவிட வேகமாக, காற்றைவிட பலமாக பரவிக்கொண்டிருந்தது. சுயவெறுப்பிலிருந்து உருவான கலையின் உக்கிரத்தில் மனிதர்கள் அகோரமாகிக்கொண்டிருந்தார்கள். உண்மையைச் சொல்வதென்றால் பார்க்கின்ற யாருமே மனிதர்களாகவே தெரியவில்லை.

அந்த வீரர்கள் கூட்டமாக இருக்கும் போது அச்சமில்லை, அச்சமில்லை என்று கர்ஜித்தார்கள். தனிமையில் ஒரு புழுவைப்போல நடுங்கிச் சுருங்கிப் போனார்கள். அதனால், அவர்கள் எப்போதும் கும்பலாகவே இருக்க பழகிக்கொண்டார்கள்.

இந்த கலையில் தனக்கு அடுத்தபடி எதிரியும் பிரதானம் என்பது வெறியூட்டுவதாக இருந்தது. அந்த எதிரி யாருமில்லை கண்ணாடியில் இருக்கும் நான்தான். கண்ணாடியின் மீது வீசும் ஒவ்வொரு வீச்சும் என்னைக் காயப்படுத்தவில்லை. ஆனால், எதிரிகள் காயப்பட்டார்கள். அதேபோல எதிரிகளும்தான். ஒவ்வொருமுறையும் என்னைக் கொன்றுவிடும் மூர்க்கத்துடன் வாளை சுழற்றி வீசுகிறேன் எதிரிகள் மடிகிறார்கள். இப்போது என்னைப் பார்ப்பதற்கு எனக்கே அச்சமாக இருந்தது. ஒருபொழுது அவர்களின் அகோரம் மேலும் பெரும் அகோரமானபோது நெருப்பு ஊசியைப் போல அச்சம் என்னை ஊடுருவியது.

ஒரு யுகத்தின் வறட்சி சூழ்ந்து ஈரம் என்பது எச்சிலில்கூட இல்லாமலாகி உலகம் கருகிச்சாகட்டும் என்ற அளவுக்கு வெறுப்பு வளர்கிறதே. அய்யோ! இப்படி எல்லோரும் கையில் கொலைவாளுடன் பைத்தியமாக அனைவரின் பாதங்களும் சூன்யத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறதே.

மனிதன் நேர்ப்புள்ளிகளிலிருந்து எங்கோ விலகிச் செல்கிறானே. இது பிறழ்வுதான். இதிலிருந்து நான் விலக வேண்டும். வழிதவறிய இந்த கும்மிருட்டு பயணத்தை திசைதிருப்ப ஒரு நட்சத்திரத்தின் ஒளி வேண்டும் எனக் கோரி அசரிரீயாக மனதின் வெளியெங்கும் எதிரொலித்தது. இந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத அளவுக்கு நெடியதாக இருந்தது.

இந்தக் கலை எப்படி என்னைக் கவர்ந்தது? இந்தக் கலையை நான் ஏன் கற்றுக்கொண்டேன்? ஒவ்வொரு தனிமனிதனின் சுயநலம், இதை நியாயப்படுத்த சுயநலத்தை பொதுநலமாக்க வேண்டும். அல்லது சுயநலத்தின் பலனை எல்லோருக்குமானதாக்க வேண்டும். அதை வென்றெடுக்க அரசியலாக்க வேண்டும். வெறுப்பிலிருந்து தோன்றும் அரசியலில் எதிரி வேண்டும். இப்படி லாபம் தரும் வெறுப்பும் கவரக்கூடியதாகத்தான் இருக்கிறது. இந்தக் கண்ணாடி முன் நின்று சண்டையிடும் வீரக்கலையின் மோகத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று உளைந்துகொண்டிருந்தேன்.

மனதின் ஆழத்தில் ஒரு சொட்டு ஈரம் தேடி, கள்ளமில்லா நட்சத்திரத்தின் ஒளியைத் தேடி, சாஸ்வதக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் சாஸ்வதம் என்று மூர்க்க வலுக்கொண்டு நிரந்தரம் என்று கர்வப்படும் உடலை ஒடுக்கும் வழி தேடி யாக்கையின் நரம்புகளாய் கிளைத்திருக்கும் வீதிகளெங்கும் அலைந்தேன். உச்சிவெடித்து உயிர்வளி பிரியும் வேகத்தில் வெப்பம் ஏறியது. சக்கரமாய் மாறி விரைந்தது கால்கள். ஈரத்தின் சுவடுகள்கூட மறைந்து வெடித்துக் கிடந்த நிலத்தில் ஒருமிடறு தண்ணீர் இன்றி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மயங்கி சுருண்டு மடிந்துகொண்டிருந்தார்கள். கடைசி விதையும் கருகும் வாசனை அறிந்து வானம் தனது கருணையைப் பொழிந்தபோது மனிதர்கள் புதிதாய் துளிர்விட்டு முளைத்தார்கள். அங்கே சரியாக முளைத்திராத பால்பற்களைக் காட்டி சிரித்த ஒரு குழந்தையிடமிருந்து வெளிப்பட்ட நட்சத்திர ஒளியில் பாதை தெரிந்தது. புஜபல பராக்கிரமம் மிக்க கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் சாஸ்வதக் கலைஞன் பட்டென துடிதுடித்து வீழ்ந்தபோது நிலையாமை தன்னை நிறுவிக்காட்டியது. அன்பு சூன்யத்தின் வலிவோடு மானுடத்தை விழுங்கியது. ஆனாலும், அந்திமத்தில் இருக்கும் அந்தக் கலையின் கர்த்தாக்கள் ஈனமாக கண்ணிகளை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக அந்தக் கலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதைப் படிக்கும் உங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்புக் கதையைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அதற்கு காரணம் நானல்ல. அந்த மொழி பேசும் பிரதேச மக்களே காரணம். ஒரு வேளை நீங்கள் இப்படியான மக்கள், வீரக்கலைஞர்கள் இந்த பூமிப் பரப்பில் எங்காவது இருப்பதாக அறிந்திருப்பீர்களானால் உங்கள் ஆய்வை மேலும் தொடருங்கள்.

அதன் பின்னர், கண்ணாடி முன்பு நின்று சண்டையிடும் வீரக்கலையை நீங்களும் தெரிந்துகொள்வீர்கள். அப்போது அதனுடைய அகோரத்தில் அதிர்ந்து  அதை மாய்ப்பதற்கான வழியையும் கண்டடைவீர்.