Friday, February 24, 2012

உண்மையைக் கொலை செய்த புனைவு...

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்…

உண்மையைக் கொலை செய்த புனைவு…

தமிழ்த்திரைப்பட நடிகர்களின் புதுப்படங்கள் வெளியாகும் போது அந்த நடிகர்களின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மாலைபோட்டு சூடம் காட்டி அவர்களை கிட்டத்தட்ட கடவுளாக்கி வழிபடும் ரசிகர்களைப் போல, இன்றைக்கு தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுக்கு வாசகர் வட்டங்களும் சதுரங்களும் உருவாகி அந்த எழுத்தாளர்களை ஒரு தீர்க்கதரிசி, எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுவிக்க வந்த மகான் என்கிற அளவுக்கு ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் அஜீத் ரசிகர்களோடு சண்டை போட்டுக்கொள்வதைப்போல இவர்களும் பிறவட்டங்களோடும் சதுரங்களோடும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இது தமிழ் சிறுபத்திரிகை எழுத்தாளர்களின் கருத்துமுரண்பாட்டு சண்டைகளிலிருந்து அவர்களின் முகாம்களிலிருந்து வாசகர்களுக்கு தாவி இருக்கிறது. ஒரு எழுத்தாளரைக் கொண்டாடுவது என்பது பற்றி எந்த மறுப்போ துவேஷமோ இல்லை. ஆனால் இந்த எழுத்தாளர்ககளின் ரசிகர் கூட்டங்களான வட்டங்களும் சதுரங்களும் உருவாக்கி இருக்கும் பிம்பத்திற்கு தகுதியானவர்கள்தானா? இவர்கள்தான் தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னர்களா? இவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லையா? அல்லது மற்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லையா? இந்த சூழல் வரமா சாபமா?

உயிர்மையில் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் சிறுகதை வெளியான போது வாசித்த பலபேர் அது தமிழின் மிகச்சிறந்த சிறுகதை என்று சிலாகித்தார்கள். அந்த கதையை முன்வைத்து அ.முத்துலிங்கம் ஜெயமோகனுடன் நிகழ்த்திய ஒரு உரையாடலும் உயிர்மையில் வெளியானது. இந்த கதையை பலர் ஜெயமோகனின் ’மாஸ்டர் பீஸ்’ என்று ஒளிபரப்பு செய்தார்கள். ஆமாம் ஊமைச்செந்நாய் ஜெயமோகனின் ’மாஸ்டர் பீஸ்’ தான் ஜெயமோகன் உண்மையின் மீதும் சத்தியத்தின்மீதும் தனது வாளை வீசி வீழ்த்துவதில் தேர்ந்தவராக இருக்கிறார் என்பதை அவரது பல படைப்புகளில் நிருபித்திருக்கிறார். அப்படி இந்த ஊமைச்செந்நாயிலும் வெற்றி கண்டிருக்கிறார். அது அவரது வாசகர்களால் பாராட்டப்படும்போது வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சலை ஒரு கள்ளப்புன்னகையோடு அவருடைய இணையத்தில் பதிவேற்றி நான் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று ஆர்பரித்துக்கொள்கிறார்.

ஊமைச்செந்நாய் சிறுகதையில் கதை சொல்லும் ஊமைச்செந்நாய் கதாபாத்திரம் வில்சன் என்கிற வெள்ளைக்காரனுக்கு வேட்டைத் துணைவனாக இருக்கிறான். அவனுக்கு கண்கள் நீலநிறமாக இருக்கிறது. வில்சன் துரை அவனை வெள்ளைக்கார ஆணுக்கும் இந்திய மலைவாழ் இன பெண்ணுக்கும் பிறந்தவன் என்று அவனைக் கண்டாலே எரிச்சல் அடைகிறான். நீயும் உன் கண்களும் செந்நாயைப் போலிருக்கிறது என்று திட்டுகிறான். ஆனாலும் அவன்தான் வில்சன் துரைக்கு வேட்டைத் துணைவனாக இருக்கிறான். அவன் இதற்குமுன் சில வெள்ளைக்காரர்களுக்கும் வேட்டைத் துணைவனாக இருந்திருக்கிறான். வில்சன் துரைக்கு ’தோமா’ என்ற கிறிஸ்துவ சமையல்காரன் இருக்கிறான். ஊமைச்செந்நாய் பக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களில் சோதி என்கிற பெண்ணை அழைத்து வந்து துரையின் அறைக்கு அனுப்புகிறான். துரை அவளை வாய்வழியான புணர்ச்சிக்கு பிறகு திட்டி அடித்து துறத்தி அனுப்புகிறான். அழுதுகொண்டே வெளியே வரும் அவளை சமையற்காரன் தோமா புணர்கிறான். அவளை வீட்டில் விட்டுவிட்டு வர செல்லும் போது அவள் அவனுடன் (ஊமைச்செந்நாய்) புணர்கிறாள். மறுநாள் காலையில் தூங்கிக்கொண்டிருக்கும் வில்சன் துரைக்கு டீ கொடுக்க செல்லும் போது தூக்கத்திலிருந்து எழுந்து தோமாவை உதைக்கிறான். பிறகு வில்சன் துரை மலம் கழிப்பதற்கு ஒரு மரபெஞ்சில் உட்கார வைக்கப்படுகிறான். அப்போது தோமா அவனுக்கு ஷேவிங் செய்து விடுகிறான். அவன் மலம் கழித்து முடித்த பிறகு தோமா அவனுடைய குதத்தை துடைத்துவிடுகிறான். இது ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சிகாலத்தில் வெள்ளைக்காரன் இந்தியர்களை எவ்வளவு இழிவாக நடத்தியிருக்கிறான். என்று மேலோட்டமாக பார்ப்பதற்கு தோன்றும். ஆனால் இந்தக் கதையில் வில்சன் துரைக்கு வேட்டைத் துணைவனாகவும் சமையற்காரணாகவும் இருப்பவர்கள் யார்? ஒரு மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவனும் கிறித்துவராக மதம்மாறிய ஒருவனும்தான்.

பெரும்பாலும் வெள்ளைகாரர்களிடம் சமையற்காரர்களாக இருந்தவர்கள் பறையர்களாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தேவையான மாட்டுக்கறியை பறையர்கள் மட்டுமே உண்பவர்களாக இருந்தார்கள். மாட்டுக்கறியை சமைப்பதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். இதில் வரும் கதாபாத்திரம் தோமா கிறித்துவத்திற்கு மதம் மாறிய ஒரு தலித் என்பதை மறுக்க முடியாது. அயோத்திதாசரின் தந்தை எல்லீஸ்துரையிடம் சமையற்காரராக இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு சித்த மருத்துவர், இவர் எல்லீஸிடம் திருக்குறள் ஏடுகளைக் கொடுத்து அதன் பிறகுதான் திருக்குறள் அச்சில் வந்திருக்கிறது இது வரலாறு.

அப்படி இருக்கையில் நிஜமாக வெள்ளையர்கள் தாழ்த்தப்பட்டவர்களையும் மதம்மாறிய கிறித்துவர்களையும் பழங்குடியினரையும் இவ்வளவு இழிவாகத்தான் நடத்தினார்களா? பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களையும் பழங்குடி இனத்தவரையும் மனிதர்களாகக்கூட மதிக்காத நிலையில் இந்தியாவிற்கு கிறித்துவ மதத்தைப் பரப்பவந்த பாதிரியார்கள்தான் அவர்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுத்தவர்கள். அதில் மதம்மாற்றுதல் என்கிற ஒரு காரணம் இருந்தாலும் பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் வணங்குகிற வெள்ளைக்காரர்களே தங்களை அங்கிகரித்ததற்காக அவர்கள் ஒரளவு ஆறுதலடைந்தார்கள் என்றால் அது மிகையில்லை. பின்னாளில் கிறித்துவத்திற்குள்ளும் இந்துமதத்தின் அத்தனை குணங்களோடும் சாதியம் வேர் பிடித்தது என்பது வேறுகதை.

கர்னல் ஹென்றி ஆல்காட் அடையாறில் நிறுவிய பஞ்சமர்களுக்கான பள்ளிக்கூடம், கிறித்துவ மிஷினரிகளின் கல்விப்பணிகள் துளியளவுகூட இல்லாமல் இன்றைய தலித்மக்களின் கல்வி வளர்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதைத்தான் தலித் அறிவு ஜீவிகளும் செயல்பாட்டாளர்களும் ஆங்கிலேயர்கள் எங்களை மனிதர்களாக மதித்த அளவிற்குகூட நீங்கள் (பார்ப்பனர்களும், ஆதிக்க சாதியினரும்) எங்களை மதிக்கவில்லை மாறாக எங்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கக்கூடாதவர்களாக ஒதுக்கி வைத்தீர்கள். உங்களைவிட வெள்ளைக்காரர்களே மேல் என்கிறார்கள். இதனால்தான் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில்கூட அயோத்திதாசர், ரெட்டை மலைசீனிவாசன், எம்.சி.ராஜா, அம்பேத்கர் போன்றவர்கள் சில நேரங்களில் ஆங்கில அரசு சார்பான காங்கிரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.

இப்படியான ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகத்தான் இன்று தலித்துகள் சிறுபாண்மையினரான கிறித்துவர்களோடும், முஸ்லீம்களோடும் ஒரு இணக்கமான சூழலை தொடர்ந்து வருகின்றனர். இதையெல்லாம் மறுக்கும் விதமாகத்தான் ஜெயமோகன் அப்படியெல்லாம் இல்லைங்கடா வெள்ளைக்காரங்கூட உங்களை மிக இழிவாகத்தான் நடத்தினான். என்று தனது ஊமைச்செந்நாய் சிறுகதையில் சொல்லிச் செல்கிறார். இதை ஜெயமோகன் கட்டுரையாக சொல்லியிருந்தால் நிச்சயமாக தலித் அறிவு ஜீவிகளால் தரவுகளோடு வாதங்களை முன்வைத்து ஒரு ரவுண்டு கட்டியிருப்பார்கள். ஆனால் அதையே புனைவில் சொல்லும்போது கலைத்தூய்மை அழகியல் என்று சொல்லி அடிவாங்காமல் தப்பித்துக்கொள்ளலாம். ஜெயமோகனும் அப்படித்தான் புனைவில் சொல்லி அடிவாங்காமல் தப்பித்துக்கொண்டு விட்டார்.

ஜெயமோகனின் வாசகர்கள் இந்தச் சிறுகதையின் கலை அழகியல் எந்த இடத்தில் இருக்கிறது என்று சிலாகித்து மெய்மறந்து போகிறார்கள். என்றால் காட்டைப் பற்றிய வர்ணனைகளிலும் வில்சன் துரை ஊமைச்செந்நாயை நீ ஒரு முட்டாள், வெள்ளக்காரனுக்கு பிறந்தவன், நீ ஒரு செந்நாயைப் போலிருக்கிறாய் நீ என்னை கொலை செய்யகூட தயங்கமாட்டாய், உனது கண்களை வெள்ளை இனப்பெண்கள் விரும்புவார்கள். அவர்களோடு நீ உறவு கொண்டாய் என்று கேள்விப்பட்டால் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வந்து கொலைசெய்வேன். பலமுறை உன்னை கொலை செய்வேன் என்று எச்சரிக்கிறான். பிறகு கொம்பன் யானை வேட்டையின்போது முதலில் சுடும்போது தப்பித்த யானையை, தேடிச்சென்று இரண்டாவது முறை சுடுவதற்கு யானையை மறைவில் இருந்து வெளியே வரவழைப்பதற்காக ஊமைச்செந்நாயை யானையை நோக்கி ஓடு இல்லாவிட்டால் உன்னை சுட்டுவிடுவேன் என்று மிரட்டும்போது உயிர்பயத்தோடு ஓடும் ஊமைச் செந்நாய். யானை வேட்டைக்குப்பிறகு வேட்டையில் வென்றவர்கள் எல்லாம் தோற்றவர்களே என்று சொல்லும்போதும், இப்படி வில்சனால் இழிவாக நடத்தப்பட்டாலும் வில்சனை கண்ணாடிவீரியன் பாம்பு கடித்து மயங்கிவிழும்போது அவனுக்கு பச்சிலை மூலிகை வைத்தியம் செய்து அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறான். அதற்கு அவன் பிழைத்த பிறகு அதற்கு பதிலாக நாங்களும் உங்களைப் போல எங்கள் சமூகத்தில் கடைநிலையானவன் அவர்கள் அங்கே செலுத்திய அந்த ஆதிக்கத்தைத்தான் உன்னிடம் காட்டிவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொல்லும்போதும் மௌனமாயிருக்கிறான். பிறகு ஒரு செந்நாயின் தாக்குதலில் ஊமைச்செந்நாய் தவறி விழும்போது காப்பாற்ற வரும் வில்சனின் உதவியை ஏற்றுக்கொள்ளாமல் ”நீ நரகத்துக்குபோ” என்று சொல்லி காரி துப்பி பிடியை விட்டு உயிரிழக்கிறான்.

இவையெல்லாம் தலித் இலக்கிய கருத்தியல் கோட்பாட்டில் ஆதிக்க சாதியினரை நோக்கி தலித்துகள் நீங்கள் ஒன்றும் எங்களுக்கு கருணையோடு படியளக்கவில்லை. எங்களது உழைப்புக்குதான் கூலி கொடுத்தீர்கள் அதுவும் குறைக்கூலி. உங்களது கருணை சலுகையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. உங்களது உடலில் ஓடும் ரத்தம்கூட எங்களது உழைப்புதான். ஆதிக்க சாதியினரின் வெறும் கருணையை சலுகையை நிராகரித்து தீவிரமாய் ஓங்கி ஒலிக்கும் குரலின் தலித் உளவியல் கருத்தியலிலிருந்து திருடி புனைவாக்கப்பட்டதுதான் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய். இந்த தலித் உளவியல் கருத்தியல் இதை ஏற்கனவே தலித்திய விவாதங்களில் வாசிக்கப்பட்டுவிட்டது. தலித் கருத்தியலை வைத்தே தலித்துகளுக்கு எதிராக மிக சாமர்த்தியமாக புனைவாக்கியிருக்கிறார். தலித் கருத்தியலைக் கொண்டு எழுதினால் மட்டும் அதை தலித் கலைப்படைப்பாக மாற்றிவிட முடியாது. அடிப்படையில் தலித் பிரக்ஞை வேண்டும்.

மற்றொரு இடத்தில் ஊமைச்செந்நாய் காட்டில் ஒரு மானை வேட்டையாடும்போது அந்த மானின் பாதி மூடிய கண்கள் அவனுக்கு சோதியோடு புணரும்போது அவள் உச்சத்தில் கண்கள் சொருக பாதி மூடிய நிலையிலிருக்கும் அவள் முகம் ஞாபகத்துக்கு வரும். இந்த ஒப்புவமை ஒரு ஆணாதிக்க மனநிலையிலானது. ஒரு பெண்ணை பாலுறவின் சுரண்டலின் மூலம் வீழ்த்துவதைத்தான் இந்த ஒப்புவமை சொல்கிறது? இதைத்தான் ஜெயமோகனின் பக்தகோடிகள் கலையின் அழகியல் என்கிறார்களா?.

அ.முத்துலிங்கம் இந்தக் கதையை வைத்து ஜெயமோகனை உலக எழுத்தாளர்கள் பலரோடு ஒப்பிடுகிறார். இந்தக் கதையின் கரு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஜெயமோகனின் பதில் நான் என்னுடைய சின்ன வயசுல நீலகிரி போயிருந்தேன். அங்கே நீலநிற கண்களைக் கொண்ட மலைவாழ் சிறுவனைப்பார்த்தேன். அதுதான் இப்போது ஊமைச்செந்நாயாக வெளிப்பட்டிருக்கிறது. ஆஹா! என்னே அருமை ஜெயமோகனின் கதைக்கரு உருவானவிதம்! ஜெயமோகன் ஒரு மலைவாழ் சிறுவனுக்கு நீலநிறமாக கண்கள் இருக்கிறது என்றால் அவன் நிச்சயமாக ஒரு வெள்ளைக்காரனுக்குதான் பிறந்திருப்பானா? இது ஆதிக்கசாதி மனநிலை இல்லையா? இப்படி கேட்டால் ஒரு படைப்பாளி அறம் சார்ந்துதான் எழுதுகிறான். அவன் இப்படி ஒரு கருத்தியலை திட்டமிட்டு அவ்வளவு நுட்பமாக சூழ்ச்சியாக ஒரு கலைப்படைப்பை எழுதுவானா? என்று கேட்கலாம்?. நிச்சயமாக திட்டமிட்டு எழுதமுடியாது அப்படி திட்டமிட்டு எழுதிய படைப்புகளை நாம் எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். அவைகளை தட்டிக்கழித்துவிட்டு சென்றுகொண்டே இருக்கலாம். ஆனால், இந்த அறம் என்கிறார்களே அது யாருக்கான அறம்? ஒரு கலைஞன் படைப்பாளி தான் சின்னவயதிலிருந்து அவன் பார்த்து வளர்ந்த சூழல், சமூகத்திடமிருந்து தான் தெரிவுசெய்து கற்றது, படித்தது இவைகள்தான் அவன் வளர்ந்தபின்னர் அவனுடைய கருத்தியலாக உருக்கொள்கிறது பிறகு அந்த கருத்தியலே அவனது படைப்புகளிலும் சமூக அரசியல் நிலைப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது. அது ஒரு நனவிலி நிலையிலேயே அவனை தயார் செய்து இயக்குகிறது. அப்படி ஒருவன் சூழ்ச்சியாக உண்மைக்கு எதிராக ஒருபடைப்பை தருகிறான் என்றால் அவன் அதை திட்டமிட்டு செய்கிறான் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். அல்லது அப்படி திட்டமிட்டு செய்யவில்லை என்றால் அவனது அடித்தளமே இயல்பே மோசமானது என்றே பொருள்கொள்ள வேண்டும். அப்படியானால் ஜெயமோகன் ஊமைச்செந்நாயை திட்டமிட்டு அயோக்கியத்தனமாக செய்திருக்க வேண்டும். இதுபற்றியெல்லாம் விவாதித்தால் கலைத்தூய்மை என்கிறார்கள் கலைத்தூய்மைவாதம் என்பதே அயோக்கியத்தனமானதுதான். ஜெயமோகன் படைப்புகளின் கலைத்தூய்மையும் அயோக்கியத்தனமானதுதான். ஜெயமோகனின் கருத்தியலை அவரை மறுக்கும் தலித்துகளை, மார்க்சிஸ்ட்களை, பெரியாரிஸ்ட்களை மிக சாமர்த்தியமாக எதிர்கொள்கிறார். மார்க்சிஸ்ட்டுகள் பெரியாரிஸ்ட்டுகளை எதிர்கொள்ளும்போது மார்க்சிஸ்ட்டுகள், பெரியாரிஸ்ட்டுகள் மீது தலித்துகள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார். தலித்துகளை எதிர்கொள்ளும் போது இந்திய தேசியம், இந்து இந்தியத்துவத்தை ஆயுதமாக கைக்கொள்கிறார். இதனால் ஜெயமோகனை இந்துத்துவவாதி என்று விமர்சனம் செய்யும் போது நான் அறம் சார்ந்த கலைஞன், எழுத்தாளன் என்ற போர்வைக்குள் ஒலிந்துகொள்கிறார்.. ஊமைச்செந்நாய் சிறுகதை எழுதிய பின்நாட்களில் இதே ஜெயமோகன்தான் தனது கட்டுரைகளில் கர்னல் ஹென்றி ஆல்காட் குறித்தும், அயோத்திதாசர் குறித்தும் கிறிஸ்துவ மிஷினரிகளின் கல்வி பங்களிப்பு குறித்தும் புகழ்ந்து எழுதியிருக்கிறார். ஜெயமோகனை இங்குதான் நாம் கவனமாக புரிந்துகொள்ள வேண்டும். கட்டுரையில் மறுக்கமுடியாத உண்மையை புனைவில் கொலை செய்து இருக்கிறார். ஜெயமோகன் இதுதான் ஒரு எழுத்தாளனின் கலைஞனின் அறமா? புறனடை நேர்காணலில் கவிஞர் குட்டிரேவதி சொல்லியிருப்பது போல் இனி படைப்புகளை விட்டுவிடுவோம் படைப்பாளிகளை போஸ்ட்மார்டம் செய்வோம்... ஆமாம் படைப்புகளை விட்டுவிடுவோம் படைப்பாளிகளை போஸ்ட்மார்டம் செய்வோம்… விமர்சனங்கள் வரும்போதெல்லாம் அறம் குறித்து அங்கலாய்க்கும் ஜெயமோகனின் அறம் குறித்த கேள்வியும் தொடரும்…

- நீலி

Tuesday, February 7, 2012

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்...

எவரும் எனது குளிர் பிரியங்களை

பகிந்துகொள்ள முன்வராதபோது

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்

எரிமலைக் குழம்பைப்போல் கனல்கிறது உள்ளே

எப்போதும் இருண்மையாகவே இருக்கிறது

எப்போதும் தாங்கமுடியாமல்

கனத்துக்கிடக்கிறது மனம்

தவிப்போடு பார்த்தேக்கிடக்கிறது கண்கள்

யாருடைய வரவையோ எதிர்நோக்கி

தீராப்பசி கொண்ட பறவையைப் போல்

என்னை கொரித்துக் கொண்டே வெட்கம்

ஏதோஒன்று வயிற்றில்

அலைகளைப்போல் ஒயாமல் புரள்கிறது

ஒருவரும் எனது இருப்பை உணராதபோது

பிணத்தைப்போல் பாரமாகிறது உடல்

எவரும் எனது குளிர் பிரியங்களை

பகிந்துகொள்ள முன்வராதபோது

எங்கேயேனும் முத்தமிடும் காதலர்களை,

பூக்களை, வண்ணத்துப் பூச்சியை பார்க்க நேர்ந்தால்

கொலையுணர்ச்சி மேலெழ பதற்றமடைகிறேன்

தனிமையில் இருக்கும்போது

தற்கொலைக்கான வழிகளை

தேர்வுசெய்யத் தொடங்குகிறேன்.

மக்கள் கூட்டத்தில் தனிமைப்பட்டுப் போகிறேன்.

அல்லது அவர்கள் என்னை தனித்து

விட்டு போகிறார்கள்...


நறுமணம் வீசிய எனது பேரன்பு

தேங்கிய நீர்நிலையைப்போல

துர்நாற்றம் வீசத்தொடங்குகிறது...

எவரோடும் பகிர்ந்துகொள்ளப்படாத பிரியம்

எரிமலைக் குழம்பைப்போல் கனல்கிறது உள்ளே...

Tuesday, January 10, 2012

நாங்கள் பேசினால் அது

நாங்கள் பேசினால் அது

அமைதியைக் குலைக்கும் பேச்சு என்கிறார்கள்.

நாங்கள் எழுதினால்

ரசனை இல்லாத எழுத்து என்கிறார்கள்.

எங்கள் பேரறிவை அவர்கள்

திமிர் என்கிறார்கள்.

எங்கள் உரிமைக்காக போராட

வீதிக்கு வந்து மறித்தால்

அதை அராஜகம் என்கிறார்கள்.

அவர்கள் அடிக்கும் போது

திருப்பி அடித்தால் வன்முறை என்கிறார்கள்

அவர்களோடு சேர்ந்திருந்தால் தேசியம் என்கிறார்கள்

நாங்கள் ஒன்று சேர்ந்தால்

சதி செய்கிறார்கள் கலவரக்காரர்கள் என்கிறார்கள்

எங்கள் தலைவரைப் போற்றுகிறோம் என்றால்

அடிமைகளுக்கு தலைவன் கூடாது என்கிறார்கள்

எங்கள் புரட்சி அடையாளத்தை அறிவிக்கும்போதெல்லாம்

அடிமை என்பதைத் தவிர

உங்களுக்கு வேறேது அடையாளம் என்கிறார்கள்

எங்கள் திமிறலில்

அவர்களின் பிடி தளரும்போதெல்லாம்

சாமர்த்தியமாய் கலவரமென

சுட்டுப்படுகொலை செய்கிறார்கள்

ஆனாலும்... ஆனாலும்...

அவர்களுக்கான விடுதலையையும்

திசையதிர அறிவிக்கிறோம்...