Monday, January 4, 2010

தாய்க்கோழி...

கூட்டமாய் தானியங்களைக் கொத்தி தின்று
பெரும் ஆரவாரத்தோடு ஊர்வலம் செல்கின்றன
குஞ்சுகள் தாய்க்கோழியோடு...
அரைவட்டமாய் வளைந்த வானத்தில்
வட்டமிடுகின்றன பருந்துகள்
மரணத்தின் நிழல்விழுவதை அறிந்து
பயந்து பதறி தாயின் நிழலில்
கூடுகின்றன குஞ்சுகள்
இறக்கையை விரித்து வல்லூரின்
வலிமையை திரட்டி விரட்டி
அடிக்கிறது பருந்தை,
தாய்க்கோழியின் இறப்பிற்குப்பின்
மீண்டும் வட்டமிடுகின்றன பருந்துகள்
எல்லாக் குஞ்சுகளும் தாய்க்கோழிகளாய்...

நிலைக்கொள்ளாமை...

ஒன்றை உறுதியாக தீர்மாணிது
முடிவுசெய்யும் போதே
அது மிகவும் குழப்பமானதாகி விடுகிறது,
மீளாத குழப்பத்தில் புதைந்துகொண்டிருக்கும் போதே
அதை உறுதியாக தீர்மாணிது
முடிவு செய்துவிடுகிறேன்,

எவற்றின் மீதும் நம்பிக்கையோடும்
நம்பிக்கையற்றும் அதற்கிடையிலும் கூட
இருக்கமுடியவில்லை,

எல்லாவற்றிலும் சீக்கிரமாகவே
சலிப்படைந்து விடுகிறேன்,

எல்லாவற்றிலிருந்தும் தொடர்பறுந்து
தனியாக திரிந்துகொண்டிருக்கிறேன்,
பிரபஞ்சவெளியில் எவ்விசையிலும்
சிக்காமல் திரியும் அபூர்வ நட்சதிரம் போல,

மிகவும் தீவிரமாக யோசிதுக்கொண்டிருக்கிறேன்
எதை அறிவதற்காக இந்த
நிலைக்கொள்ளாமல் அலைவுறும் உன்மத்தமம்...