Wednesday, August 23, 2017

‘அணிகள் இணைந்தது’ ஒரு அபத்த நாடகம்!

சிறப்புக் கட்டுரை: ‘அணிகள் இணைந்தது’ ஒரு அபத்த நாடகம்!

தமிழக ஊடகங்களைக் கடந்த 6 மாதங்களாகப் பீடித்திருந்த ஒரு கோட்டித்தனம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து அவர்கள் வேறு ஏதேனும் ஒன்றை இதேபோல பின்தொடரலாம். வாழ்க ஜனநாயகத்தின் நான்காவது தூண்.

தமிழக அரசியல் எப்போதுமே தனிமனித ஆளுமைகளின் பிம்பத்தைக் கொண்டே கட்டியமைக்கப்பட்டுவந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகான தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பிம்பம் ராஜகோபாலாச்சாரியார். இவருக்கு அடுத்து காமராஜ். காங்கிரஸுக்கு மாற்றாக உருவான திமுகவின் பிம்பம் அண்ணாதுரை. அண்ணாவுக்குப் பிறகு திமுகவின் பிம்பம் கருணாநிதி. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவின் பிம்பம். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பிம்பம் ஜெயலலிதா. இப்படி பிம்பங்களை மையமாக வைத்தே தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் அறியப்பட்டுவந்துள்ளன.

இந்த பிம்பங்கள் உருவானதில் ஒன்றை கவனிக்க வேண்டும். ராஜாஜி வாழ்ந்த காலத்திலேயே காமராஜ் ஒரு பிம்பமாக உருவாவதற்கு அனுமதிக்கப்பட்டது. அண்ணாதுரை வாழ்ந்த காலத்திலேயே அவர்களுடைய தம்பிகள் தனி ஆளுமைகளாகத் திகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. திமுகவுக்குத் தலைமையேற்ற கருணாநிதி காலத்திலும் எம்.ஜி.ஆர். போன்ற பிம்பங்களும் கட்சியில் முகியத்துவம் பெறுவதற்கான சூழல் இருந்தது. எம்.ஜி.ஆர்., தன்னை அறியாமலேயே, தனது கட்சியின் அடுத்த அரசியல் பிம்பமாக ஜெயலலிதாவை விட்டுச் சென்றார். திமுக தலைவர் கருணாநிதி முதுமையில் உடல் நலக் குறைவால் இருக்கிறார். அவர் இருந்த இடத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவின் அடுத்த பிம்பமாக எழுந்துள்ளார்.
ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் முதலமைச்சராகவும் மறைந்த ஜெயலலிதா, தனக்குத் தெரியாமல்கூட யாரும் அதிமுகவின் அடுத்த பிம்பமாக எழுந்துவிடக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அப்படி பிம்பமாக மாறும் வாய்ப்புள்ள யாரையும் அவர் தனது கட்சிக்குள்ளும் தனது வாழ்க்கைக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இதன் விளைவு ஜெயலலிதா என்ற பிம்பம் மறைந்த பின், அதிமுகவின் பிம்பம் என்பதே ஒன்று இல்லாமல்போனது. இப்போது, பிம்பமாக மாறுவதற்கு எந்தக் கூறுகளும் இல்லாதவர்கள்தான் கடந்த 6 மாதங்களாக அதிமுகவின் தலைமைப் பொறுப்பையும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்ற உச்சபட்ச நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிம்பங்களின் தலைமையில்தான் ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி செயல்பட வேண்டும் என்று இதன் பொருள் அல்ல. ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரை பிம்பங்களாக மாறாதவர்கள் மக்களைக் கவர முடியாது என்பதுதான் யதார்த்தம். பிம்பங்களாக உருப்பெறாத ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டிவி. தினகரன் ஆகியோரின் பிரிவால் அதிமுக பிரிவதும் சேருவதுமாக நாடகம் நடக்கிறது.

அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றத் துடிக்கும் இவர்கள் பிம்பமாக மாற வேண்டும் என்றால், தங்களை மக்கள் பக்கம் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாட்டையாவது இவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்களோ நாற்காலியின் பக்கம் மட்டுமே தங்களை நிறுத்திக்கொண்டார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஜி.எஸ்.டி.க்கு ஒப்புதல் அளித்தார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். இவர்களின் அரசியல் நிலைப்பாடு இப்படி ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கிறது.

பன்னீர் செல்வமும் பழனிசாமியும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு வீசிக்கொண்டும், அணிகள் இணைப்பு என்று பேசிக்கொண்டும் இருந்தபோதுதான், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போரட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கைகுலுக்கிக்கொண்டிருந்தபோதுதான், தங்கள் மண்ணையும் குடிநீரையும் பாழாக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து கதிராமங்கலத்தில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஈபிஎஸ், ஓ.பி.எஸ்ஸுக்குத் துணை முதல்வர் பதவி தந்து அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தபோதுதான், தமிழக விவசாயிகள் டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரியும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அணிகள் இணைந்தன, இனி பிரிவில்லை என்று கூறியபோதுதான் தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஓபிஎஸ் அணியினர் பதவி, அதிகாரம் என இலக்கை அடைந்துவிட்டார்கள். எடப்பாடி அணியினரின் சட்டமன்ற பலம் கூடிவிட்டது. இரு அணியினருக்கும் வேண்டியது கிடைத்துவிட்டது. மக்களுக்கு வேண்டியது எப்போது கிடைக்கும்? அவர்கள் பிரச்சினைகளுக்கு யார் தீர்வு சொல்வார்கள்? நெடுவாசலில், கதிரமங்கலத்தில், டெல்லில் போராடுபவர்களுக்கு என்ன பதில்? விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நீட் விஷயத்தில் மாணவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அதிமுக அணிகள் இணைந்து நாற்காலிகள் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டன.
இதை நம் காலத்தின் மாபெரும் அரசியல் அபத்த நாடகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?