Monday, March 5, 2018

தெற்கிலிருந்து ஒரு சூரியன் – பேரவலங்களை மறைத்த வாழ்த்து கோஷம் – 2

பத்திரிகையாளனால் வடிவமைக்கப்படும் திருமாவளவன்!

முத்துவேல் கருணாநிதியின் அறுபதாண்டு கால சட்டமன்றப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ‘தி இந்து’ நாளிதழ் தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் சிறப்பு மலர் வெளியிட்டது. இந்த மலர் குறித்த எனது விமர்சனத்தை நூல் குறித்ததாக மட்டுமில்லாமல் மலரில் கருணாநிதி பற்றி எழுதிய, நேர்காணல்களில் கருணாநிதியைப் புகழ்ந்த நபர்கள் சார்ந்ததாக பிரித்துக்கொண்டது அவர்கள் மீதான தனிப்பட்ட வெறுப்போ, காழ்ப்போ காரணம் இல்லை என்பதை முதலில் தெரிவித்துவிடுகிறேன்.
தெற்கிலிருந்து ஒரு சூரியன் மலர் குறித்து எனது விமர்சனத்தை நான் ஏன் இப்படி நபர்கள் சார்ந்ததாக பிரித்துக்கொண்டேன் என்பதற்கு மலர் குறித்து எனக்குள் எழுந்த கேள்விகளே படிப்பவர்களுக்கும் ஏற்புடைய பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கருணாநிதியால் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று விமர்சிக்கப்பட்டு வந்த THE HINDU ஆங்கில நாளிதழின் குழுமத்திலிருந்து வெளியாகும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கருணாநிதிக்கு சிறப்பு மலர் வெளியிட்டது ஏன்?

அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயராம் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த மலரை ‘தி இந்து’ வெளியிட்டிருக்குமா?

இந்த மலர் வெளியிடும் யோசனையை ‘தி இந்து’வில் யார் முதலில் முன்மொழிந்திருப்பார்கள்?

மலரில் யார் யார் எழுத வேண்டும், யார் யாரை நேர்காணல் செய்ய வேண்டும் என்று எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்?

தமிழகத்தில் திமுகவினரைத் தவிர்த்து மாற்றுக் கட்சி தலைவர்களில் திருமாவளவன், நல்லக்கண்ணு இவர்களிடம் மட்டும் நேர்காணல் செய்தது ஏன்?

அந்த வரிசையில் ரவிக்குமாரிடம் கட்டுரை வாங்கியதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற தலைப்புக்குச் சொந்தக்காரரும் மலர் பொறுப்பாசிரியருமான சமஸ் மலர் உருவாக்கத்தில் அவருடைய பங்கு என்ன?

இந்த மலரில் திராவிட இயக்கத்தையும் திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு கால ஆட்சியையும் கருணாநிதியையும் புகழ்ந்து திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் என்னவிதமான புதிய பார்வையுடன் எழுதியிருக்கிறார்கள்?

இப்படியான கேள்விகள் நான் தலைப்புகளைப் பிரித்துக்கொண்டதற்கு போதுமான காரணங்களாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலரின் விமர்சனம் முதல் பகுதி ‘தன்னலத்தேட்டமே பிரதானம் – அறிவுஜீவி ரவிக்குமார்’ என்ற தலைப்பில் எழுதினேன். அதில் பெரும்பகுதி ரவிக்குமாரின் ‘கொதிப்பு உயர்ந்து வரும்’ நூலை முன்வைத்தேன். இரண்டாவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி எழுதுவதற்கு காரணம் ரவிக்குமாரின் ‘கொதிப்பு உயர்ந்து வரும்’ நூலுக்கு “இவை கலகத்தின் சினைகள்” என்று திருமாவளவன் முன்னுரை வழங்கியிருப்பது சிறப்புதான் இல்லையா? இதன் மூலம், கருணாநிதி மற்றும் திராவிட கட்சிகள் மீதான ரவிக்குமாரின் விமர்சனங்களுக்கு திருமாவளவன் அங்கீகரித்திருக்கிறார் இல்லையா? அப்படியானவர் 15 ஆண்டுகளில் எப்படி இப்படி மாறிப்போனார்.

அரசியல் ரீதியாக எங்கள் ஊரை பழைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது என்று சொல்வது சரியாக இருக்கும் (இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தாலும்). பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து 1990–களில் எங்கள் பகுதியில் தலித்துகளின் அரசியல் எழுச்சி தொடங்கியது என்று கூறுவதைவிட புதிய வேகம் கொண்டது என்று கூறலாம். ஏனென்றால், இப்பகுதிகளில் தலித் அரசியலை தொடர்ச்சியாகவோ அல்லது சிறிது இடைவெளிவிட்டோ வட்டார அளவில் அவரவர்களின் சக்திக்கு ஏற்ப முன்னெடுத்துவந்தார்கள். இதில் எல்லா ஊர்களிலும் சமூக அக்கறைகொண்ட படித்த தலித் இளைஞர்கள் பங்கேற்றார்கள். இந்த இளைஞர்கள் எல்லோருமே இந்திய குடியரசு கட்சியின் மூலமாக திரண்டவர்கள். இந்த இளைஞர்கள் முதலில் அவர்கள் ஊரில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் தொடங்கினார்கள். உள்ளூர் அளவில் நடந்துவந்த சாதிய பாகுபாடுகளை எதிர்த்து செயல்பட்டார்கள். டீ கடைகளில் இரட்டை டம்ப்ளர் முறை ஒழிப்பு, பறை அடிக்க மறுத்தல், உள்ளூர் கோயில்களில் தங்களுக்கான உரிமையைக் கேட்பது, ஏரிக்கரை ஏலம் உள்ளிட்ட பஞ்சாயத்து பொது ஏலங்களில் சேரிகளுக்கான பங்கை கேட்பது என இவையெல்லாம் பெரும்பாலும் ஜனநாயக முறையிலான சட்டவழியிலான போராட்டங்களாகவும் உரிமை கோரல்களாகவும் இருந்தது. இதுமட்டுமில்லாமல், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடுவது; சேரிகளில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இரவில் கட்டணமில்லாமல் டியூஷன் சொல்லித் தருவது; பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசளிப்பது; பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் படத்தை சாமியைப் போல அலங்கரித்து வீதிவுலா நடத்துவது; என்று அவர்களின் பணிகள் நீளும். இவையெல்லாம் அந்தந்த ஊரில் அவரவர் சக்திக்கு ஏற்ப நடைபெற்றது. அதே நேரத்தில் இந்த இளைஞர்கள் எல்லாம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை படித்தவர்கள் அல்ல. அவர்களைப் பொறுத்தவரை உள்ளூரில் நிலவும் சாதிய பாகுபாட்டை, ஒடுக்குமுறையை ஒழிக்க வேண்டும். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நமக்காக பாடுபட்டவர்; அவர் நமது தலைவர்; அதனால், அவர்கள் அவரைப் போராட்டப் பதாகையாகக் கொண்டனர்.

எங்கள் ஊரிலும் எனது மாமாவும் (வி.கே.கண்ணன்) சித்தப்பாவும் (எஸ்.சங்கரன்) அப்படி செயல்பட்டவர்களே. நான் இப்படியான அரசியல் பின்னணி கொண்ட பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்பதில் பெருமையே. இவர்களெல்லாம் 2000-க்குப் பிறகு இந்திய குடியரசு கட்சியின் தலைமையின் தொய்வாலும், கட்சிக்கு இந்த இளைஞர்களை எப்படி அரசியலாக வளர்த்தெடுப்பது என்ற தொலைநோக்குப் பார்வையின்மையாலும் இந்த இளைஞர்கள் அவரவர் வாழ்க்கை பொருளாதார நெறுக்கடிகளில் சுறுங்கிப்போனார்கள். இந்திய குடியரசு கட்சியும் பெயரளவினதாக மாறிய பிறகு, இப்பகுதிகளில் ஒரு புதிய தலித் அரசியல் கட்சிக்கான தேவையும் ஒரு தலித் தலைமைக்கான வெற்றிடமும் ஏற்பட்டது. இந்த சூழலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வரவு நிகழ்ந்தது.
பள்ளிக்கு அருகே உள்ள மாமரத்தடியில் கீழே உதிர்ந்து கிடந்த மாம்பிஞ்சுகளை எடுத்து திண்றதற்காக சேரியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்களை ஒரு அறுபது வயது கிழவன் மாட்டை அடிக்கும் சாட்டைக் கோலால் கண்மூடித் தனமாக அடித்ததில் மார்பில் ரத்தம் கசிய அடி வாங்கிய ஒரு சிறுவன். சாதியப் பாகுபாடுகளை சிறுவயதிலேயே உணர்ந்த அவனுக்கு மாமா மற்றும் சித்தப்பாவின் செயல்பாடுகள் ஈர்ப்பானவையாக இருந்ததில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

இந்திய குடியரசு கட்சியின் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த எனது மாமாவும் விடுதலை சிறுத்தைகள் இயக்கமாக இருந்த காலத்திலேயே தலைவர் இராமசாமி திருமாவளவனின் (தொல்காப்பியன் திருமாவளவன்) வசீகரமான பேச்சில் ஈர்க்கப்பட்டு விடுதலை சிறுத்தையானார். அவர் கொண்டுவந்த திருமாவளவனின் அனல் பறக்கும் பேச்சுகள் அடங்கிய கேசட்டுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். அதோடு, தலித் முரசு போன்ற இதழ்களைப் படித்தும் வந்தவன். அதே நேரத்தில், எனது மாமா தேர்தல் காலங்களில் திமுககாரராகவும் இருந்தார்.

இந்த சூழலில்தான் விசிக தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. திருமாவளவன் மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர், திருமாவளவன் கூட்டணியை விட்டு விலகினார். அப்போது கூட்டணியிலிருந்து விலகுவதற்கு திருமாவளவன் கூறிய காரணம் “திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர மறுக்கிறது” என்று குற்றம் சாட்டினார். இதையேதான் அவரது கட்சி இணைய தளமும் கூறுகிறது.
இதையடுத்து, 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளா, புதிய தமிழகம், மக்கள் தமிழ்த் தேசியம் போன்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்.
இந்த காலகட்டத்தில் எங்கள் ஊரில் பாமகவினர் அரசியல் பற்றி எந்த கொள்கையும் படிப்பும் நிலைப்பாடும் இல்லாத எங்கள் அப்பாவை பாமகவில் சேர்ந்துவிட்டிருந்தார்கள். இது போல சேர்க்கப்பட்டவர்களைக் காட்டி எங்கள் கட்சியிலும் எஸ்.சி. மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ள பாமகவினருக்கு பயன்பட்டது.

2004 தேர்தலில் பாமக சார்பில் ஆர்.வேலு போட்டியிட்டார். விசிக கூட்டணி அமைத்திருந்த மக்கள் தமிழ்த் தேசியம் கட்சியிலிருந்து சேதுமாதவன் போட்டியிட்டார்.

அப்போதெல்லாம் பூத் சிலிப் எழுதிதான் தர வேண்டும் அந்த இடத்தையே எல்லா கட்சியினரும் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சார இடமாக பயன்படுத்திக்கொண்டனர். இந்த தேர்தலில் பள்ளி மாணவனான  நான் எனது மாமாவுடன் இணைந்து பூத் சிலிப் எழுதிக் கொடுத்தேன். விடுதலை சிறுத்தைகள் கூட்டணி என்பதால் சேதுமாதவனுக்கு பணி செய்தோம். நாங்கள் செயல்படுவதைப் பார்த்த பிறகுதான் அங்கிருந்த கண்ணப்பனின் மக்கள் தமிழ்த் தேசியம் கட்சியினர் சிலர் வேலை செய்ய முன்வந்தார்கள். எல்லா இடத்திலும் உழைப்பது தலித்துகள் பலன் பெறுவது மற்றவர்கள் தானே. அப்போது பாமகவினர் எனது அப்பாவிடம் “பாருய்யா உம்பையன் அம்பு சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறான்”  என்று சொல்ல, கோபமடைந்த அவர் “டேய்! தேவடியா பையா! என் பேரை கெடுத்துடுவ போல இருக்குதே” என்று திட்டினார். நானும் ஒரு கெட்டவார்த்தை பேசிவிட்டு “நீ பாமகன்னா நான் விடுதலை சிறுத்தைகள்” என்று பேசியது இப்போதும் நினைவில் உள்ளது. அந்த வகையில் வட ஆற்காடு பகுதி மக்கள் விசிகவை நம்பிக்கையுடன் பார்த்தார்கள். ஆனால், அடைந்ததோ பெருத்த ஏமாற்றம். விசிக கோஷங்கள் முன்னிறுத்தி கவர்ந்த அளவுக்கு அவர்களின் செயல்கள் இல்லை. இன்றைக்கும் கட்சிக்காரர்கள் யாரும் கிராமங்களுக்கு சென்று கிளை தொடங்கவில்லை. அந்தந்த கிராமத்து மக்களே தங்களுக்கு ஒரு அரசியல் கட்சி வேண்டுமென்று அவர்களே கிளைகளைக் கட்டிக்கொண்டனர். இப்போதும் அதே நிலைதான். அவர்களை அரசியலாக வழிநடத்தக் கூட நாதி இல்லை.

விடுதலை சிறுத்தைகள் இயக்கமாக  இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாறி தேர்தல் அரசியல் களம் நோக்கி நகர்ந்த காலம் யாருடையது என்றால் அது கருணாநிதியின் திமுக ஆட்சியில் இருந்த காலம். கருணாநிதி உண்மையிலேயே சாதி ஒழிப்பிலும், பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா என்றால் இல்லை. தொடக்க காலத்தில் விசிகவின் பணியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. திமுக கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா ஆகிய திராவிடக் கட்சி தலைவர்கள் தலித்துகளுக்கு இழைத்த அநீதியை அவர்கள் மீதான விமர்சனமாக முன்வைத்துதான் விசிகவின் எழுச்சி அமைந்தது. இந்த இரு கட்சிகளும் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவத்தையும், அவர்களுக்கான சமூக அரசியல் பெருமானத்தையும் வழங்க மறுத்ததால்தான் விசிக எழுந்தது. ஆனால், தேர்தல் பாதைக்கு வந்த பிறகு விசிக தேர்தல் கூட்டணி என்பதைக் கருத்தியல் கூட்டணி என்று காட்டிக்கொள்கிறது. இதன் மூலம் கடந்த காலங்களை வசதியாக மறக்கச் சொல்கிறது.

மிகவும் சொற்பமான காலம் செய்தியாளராக பணிபுரிந்தவன் என்ற முறையில் திருமாவளவனைப் பற்றி எனது கணிப்பு இதுதான்.
திருமாவளவனை நேர்காணல் செய்யும் ஒரு பத்திரிகையாளன் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அல்லது பத்திரிகையாளனின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அவருடைய நேர்காணலை கேள்விகளால் வடிவமைத்துவிட முடியும்.

திருமாவளவன் கருணாநிதியிடம் அரசியல் கற்றவர். அதனால்தான், பல விஷயங்களில் அவர் கருணாநிதியைப் போலவே செயல்படுகிறார். தன்னைப் பற்றிய பிம்பத்தை உருவாக்குதல், தமிழகத்தின் அரசியல் தலைமையாகவும் தமிழர்களின் கருத்தியல் தலைமையாகவும் கருணாநிதி தன்னை நிறுவிக்கொண்டதைப் போல, திருமாவளவனும் தன்னை தலித் அரசியல் தலைமையாகவும் கருத்தியல் தலைமையாகவும் நிறுவிக்கொள்கிறார். ஆனால், இருவருமே அதற்கு நேர்மையாக இருப்பதில்லை. திருமாவளவன் திமுகவிடம் தலித் அரசியலை மட்டுமல்ல தலித் மக்களின் உரிமைக் கருத்தியலையும் அடகு வைத்துவிட்டார்.

மத அடிப்படைவாத சக்திகளும் சாதி அடிப்படைவாத சக்திகளும் கூர்மைபெற்று எழுந்திருக்கும் இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் உண்மையில் மாற்று அரசியல் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலித் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்நேரம் களத்தை தமதாக்கியிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கு காரணம் இவர்களின் பலவீனம் அன்றி வேறில்லை. ஆனால், திருமாவளவன் சரிந்துவிட்ட திமுகவுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டும் வேறு வாய்ப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரு பத்திரிகையாளனாக சமஸ் எப்படி எதிர்பார்த்தாரோ அல்லது அவர் நினைத்ததைவிட அதிகமாக திருமாவளவன் தனது நேர்காணலில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். 2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போது ‘தி இந்து’வில் வெளியான திருமாவளவனின் நேர்காணலும், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலரில் வெளியாகியிருக்கும் நேர்காணலுக்கும் நெறுங்கிய தொடர்பு உள்ளது. இதை தொடர்ச்சி என்று கூட கூறலாம். ஒரு பத்திரிகையாளன் திருமாவளவனின் நேர்காணலை வடிவமைத்துவிடக்கூடிய அளவில்தான் திருமாவளவன் இருக்கிறார்.

உதாரணத்துக்கு ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலரில் ‘தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அம்பேத்கரையும் திராவிட அரசியலுக்கு எதிராக தலித் அரசியலையும் முன்னிறுத்தும் ஒரு போக்கு இப்போது தீவிரமாகியிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்றக் கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன் “பொது நீரோட்டத்தில் தலித்துகளை இணைக்கிற போராட்டம் இருக்கிறதே, அதுதான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் படி. ஆக தமிழன் என்ற அடையாளமும் சாதி ஒழிப்பு என்ற அடையாளமும் வேறு வேறு அல்ல. இந்திய அளவில் எந்த அம்பேத்கரிய இயக்கமும், மொழி வழி  தேசியத்தை இணைத்துப் பேசியதில்லை. நாங்கள்தான் அதைத் தூக்கிப்பிடிக்கிறோம். ஏனென்றால், சாதியின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்து மதம் இன்று இவ்வளவு வலுவாக இருப்பதற்கு இந்திய தேசியமும் ஒரு காரணம். நான் முன்னரே குறிப்பிட்டபடி ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ ஒற்றைக் காலாச்சாரத்துக்கு எதிரான மாற்று பெரியாரிடத்தில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள் சாதி ஒழிப்பை மையமாகக் கொண்டிராவிட்டாலும் சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு, குறிப்பாக தலித் இயக்கங்களுக்கு அவர்களே இங்கு நேச சக்திகள். இதை உணராதவர்கள் அல்லது இந்த இரு இயக்கங்கள் இடையில் ஒற்றுமை நீடிக்கக்கூடாது என்று விரும்புபவர்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொம்பு சீவிவிடுகிறார்கள். அதைக் கடக்க வேண்டும். திராவிட இயக்கத்தினரோடு சாதி ஒழிப்பை நோக்கி நாம் நகர வேண்டும். நம்முடைய எதிரியான சாதி மிகப் பெரிய ராட்சதன். கோடி கைகள் அதை எதிர்க்க வேண்டும். அதனால், கோடி கைகள் இணைய வேண்டும்.” என்கிறார்.

சாதி ஒழிப்பில் அக்கறை இல்லாத திராவிடக் கட்சிகள் எப்படி சாதி ஒழிப்பு பேசும் தலித்துகளுக்கு நேச சக்தியாக இருக்க முடியும்? திராவிட கட்சிகளின் இந்த ஐம்பதாண்டு கால ஆட்சியில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள், கொலைகள், சமூக அரசியல் நெறுக்கடிகள் இவைகளைப் பட்டியலிட்டுப் பார்த்துவிட்டு, அதன் பிறகு, திருமாவளவன் திராவிடக் கட்சிகள் தலித் இயக்கங்களுக்கு நேச சக்திகளா? என்று சொல்லட்டும்.

ஒரு பத்திரிகையாளன் திருமாவளவனின் நேர்காணலை எப்படி வடிவமைக்க முடியும் என்பதற்கு, இன்னொரு உதாரணமாக, நான் திருமாவளவனை 2015-ல் எடுத்த ஒரு பிரசுரமாகாத நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிடுகிறேன்.
“கேள்வி: திராவிடக் இயக்கத்தையும், திராவிடக் கட்சிகளையும் பெரியாரையும் தலித் அறிவுஜீவிகள் விமர்சனம் செய்கிறனர். இவர்களை திராவிட இயக்க அறிவுஜீவிகளும் மற்றவர்களும் எதிரிகளாக பார்க்கும் போக்கு உள்ளது இதைப் பற்றி கூறுங்கள்?
திருமாவளவன்: தலித் அறிவுஜீவிகளின் விமர்சனங்களை எதிர்க் கருத்துகளாக நினைத்து எதிரிகளாக பார்க்கக் கூடாது. தலித் அறிவுஜீவிகளின் விமர்சனத்தை நேர்மறையாக அனுக வேண்டும். அவர்களின் விமர்சனங்களை பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
இப்படிதான் திருமாவளவனின் கொள்கை நிலைப்பாடுகள் பத்திரிகையாளர்களால் வடிமமைக்கப்படுகிறது.

(அடுத்தது தெற்கிலிருந்து ஒரு சூரியன் மலர் பொறுப்பாசிரியர், பத்திரிகையாளர் சமஸ் பற்றி)