Wednesday, March 20, 2013

அன்பின் தொல் படிவங்களை தந்தவள்...


அவள் அளவுக்கு அழகான
வண்ண வண்ணமான கூழாங்கற்களை
மொட்டவிழும் அவளின் கையிலிருந்து
எனது கைகளுக்குள் புதைத்தாள்.
கூழாங்கற்களின் குளுமை
ஆதிமனிதனிலிருந்து கொண்டுவந்து
சேர்த்திருந்தது அன்பின் நீர்ப்பெருக்கில்
இழைத்த பளபளப்போடு
அவள் சிரிப்பினில் மின்னும் அழகு
அவள் புதிய விளையாட்டுகளை உருவாக்குகிறாள்
என்னால் ஒருபோதும் புதிய விளையாட்டுகளை
தனியாக கண்டடைய முடியவில்லை
விளையாட்டுகளை உருவாக்கும் கலையை அவளிடம்
கற்றுக்கொண்டிருக்கிறேன்.
அவள் நீளமான எனது தலைமுடிகளை
தலையின் இருபக்கமும் நேராக நிற்க வைத்து
என்னை மாடு என்கிறாள்.
அவள் பார்க்கிற எல்லோருக்கும்
அவளைப் பார்க்கிற எல்லோருக்கும்
கூழாங்கற்களைத் தருகிறாள்.
அவள் கடலைத்  துளி நீராய்
அனைத்து வைத்திருக்கும்
அன்பின் தொல் படிவங்கள் நிறைந்த கடற்கரை
கரையெல்லாம் வண்ண வண்ணமான
கூழாங்கற்கள்…

No comments:

Post a Comment